Monday, July 18, 2011

மும்பை நகரில் வெடிகுண்டே

ஏதும் அறியா அப்பாவிகளே-உயிரை
   இழந்தார் அந்தோ பாவிகளே
தீதும் உமக்கவர் செய்தாரா-பொல்லா
   தீவிர வாதிகள் சொல்வீரா
வீதியில் நடக்கவும் அஞ்சுவதே-மத
   வெறியரின் செயலால் மிஞ்சுவதே
நீதியில் கொடியோர் வளர்கின்றார்-தாம்
    நினைத்ததை நாளும் செய்கின்றார்
 
மும்பை நகரில் வெடிகுண்டே-தேடி
    மூன்று இடங்கள் அவர்கண்டே
வெம்பவும் மக்கள் வெடித்தாரே-தீயில்
    வெந்துமே  சிலரும் மடிந்தாரே
அம்பை எறிந்தவன் யாரென்றே-அரசு
     அறியும்  அந்த நாளென்றோ
தெம்பே இன்றி தினந்தோறும்-மக்கள்
    தெருவில் நடக்கவும் பயமேறும்

மதவெறி இதற்குக் காரணமா-இங்கே
   மனித உடல்கள் தோரணமா
உதவிடும் துரோகிகள் யாரிங்கே-நம்
   உளவுத் துறையும் போனதெங்கே
பதவி வகிப்போர் யாவருமே- பாடும்
   பல்லவி பலத்த கண்டணமே
கதறும் மக்களை தேற்றிடுமா-மன
   காயத்தை முற்றும் ஆற்றிடுமா

வெடித்திட வேண்டா குண்டுமினி-அரசு
    விரைவாய் வழிமுறை கண்டுமினி
தடுத்திடச் செய்வதே முதற்பணியாம்-செய்ய
    தவறின் தொற்றும் பெரும்பிணியாம்
அடுத்வர் சோற்றில் மண்அள்ளி-போடும்
   அரக்கரை வேருடன் நாமகிள்ளி
எடுத்திடும் வரையில் ஓயாதே-அரசு
    உரியன செய்யின் துயரேதே

12 comments :

  1. மதவெறி இதற்கு காரணமா-இங்கே
    மனித உயிர்கள் தோரணமா
    வார்த்தைகள் இப்படி அருவியாய்
    கொட்டுவதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //அரசு
    உரியன செய்யின் துயரேதே//
    செய்ய வேண்டுமே!
    அருமையான கவிதை!

    ReplyDelete
  3. உதவிடும் துரோகிகள் யாரிங்கே-நம்
       உளவுத் துறையும் போனதெங்கே
    பதவி வகிப்போர் யாவருமே- பாடும்
       பல்லவி பலத்த கண்டணமே
    கதறும் மக்களை தேற்றிடுமா-மன
       காயத்தை முற்றும் ஆற்றிடுமா

    ஆம் ஐயா இந்த உளவுத்துரை ஏன் இருக்கென்றே தெரியவில்லை..?
    மாற்று கருத்துள்ள அரசியல் வாதிகளின் செயல்பாடுகளை மோப்பம் பிடிப்பதற்கா..

    ஐயா உடம்பை நன்றாக கவணித்து வாருங்கள்.. உங்கள் தமிழ்த்தொண்டு எங்களுக்கு தேவை..
    நீங்கள் நீடூடி வாழ இயற்கை உங்களுக்கு உதவட்டும்..

     ஏனோ தெரியவில்லை இபோதெல்லாம் காட்டான் ஐயாவின் வீட்டு படலையில் அடிக்கடி குழ போடுறான்.. 
    ஐய்யாவிற்கு காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  4. கொடுமைதான்
    மதம் பிடித்த மானுட அரக்கர்கள் - அந்தோ
    பதம் பார்க்கும் பாவப்பட்ட பூமியதுவோ....
    படைத்தவன் ஏனோ! மறந்துவிட்டான் - இப்
    பாவிகள் உடலில் இதயம் வைக்க...
    புத்தனும் காந்தியும் பிறந்த நாட்டில் - மதப்
    பித்து பிடித்தக் காட்டேறிகள் அனைத்தும்
    கொத்து கொத்தாய் கொள்ளியில் இடும்
    நாளெதுவோ?...

    நன்றிகள் புலவரே!

    ReplyDelete
  5. Ramani said...

    இங்கே கொட்டுவது அருவியே-ஆனால்
    அங்கே கொட்டுவது நீர்'வீழ்ச்சியே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...

    நன்றி ஐயா நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. காட்டான் said...

    உங்கள் தமிழைப் படிப்பதோடு
    காதால் கேட்கவும் துடிக்கிறது
    மனம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. //மதவெறி இதற்குக் காரணமா-இங்கே
    மனித உடல்கள் தோரணமா
    உதவிடும் துரோகிகள் யாரிங்கே-நம்
    உளவுத் துறையும் போனதெங்கே
    பதவி வகிப்போர் யாவருமே- பாடும்
    பல்லவி பலத்த கண்டணமே
    கதறும் மக்களை தேற்றிடுமா-மன
    காயத்தை முற்றும் ஆற்றிடுமா///

    உங்களின் தமிழ் தீ அவர்களை சுட்டெறிக்கட்டும் அய்யா , தமிழால் தவறு செய்தவர்களை தண்டித்து விடுங்கள்.

    ReplyDelete
  9. தமிழ் விரும்பி said...

    விரும்பியே தமிழைக் கற்றேன்-தமிழ்
    விரும்பிடும் பேறு பெற்றேன்
    கரும்பிலே இனிக்கும் சாறே-முக்
    கனிதரும் சுவையாம் நீரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. A.R.ராஜகோபாலன் said...

    நன்றி சகோ
    எதிர்பார்க்கும் சிலரை காணவில்லை
    என்றால் மனதில் ஒரு வலி.
    அதில், நீங்களும் ஒருவர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. மனிதனை மனிதன் எல்லையில்லாது விரும்பும் காலம் எப்போ தோன்றும். பழிக்குப்பழி இனவெறி, மதவெறி என்றெல்லாம் மனிதன் அலையும் வரை இதற்குத் தீர்வுதான் எங்கே?

    ReplyDelete
  12. கோபக் கனலாய் வார்த்தைகளை கவிதையில் கொட்டியிருக்கிறீங்க. மனதைக் கனக்கச் செய்யும் வரிகள் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...