Friday, August 5, 2011

ஊரறிய உலகறிய உண்மை தன்னை

       
     மீள் பதிவு
 
   ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
      உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
   பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
     பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
   சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
     செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
   வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
     விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா

   தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
      தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
   இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
      இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
   கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
      காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
   பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
      பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
 
  ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
     ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
  ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
     உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
 கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
     கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
 பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
    பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே

 கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
    காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
 மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
    மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
 எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
    ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
 உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
    உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
                                                                                     
           புலவர் சா இராமாநுசம்

14 comments :

 1. ஐயா உங்களது வரிகள் ஒவ்வொன்றும் உண்மையின் வரிகள்.....

  ReplyDelete
 2. கவிதையில் குமுறல் கண்டேன். வேதனை நடப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. ///கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
  காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க//// வரிகள் சூப்பர் ... ஆனால் இந்த உலகில் சுயநலம் தான் ஓங்கி நிற்கிறது..

  ReplyDelete
 4.  கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
      காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
   மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
      மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
   எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்

  ஆமையா இவர்கள் கண்ணாடிதான் தேடுவார்கள் கைப்புண் பார்க்க..

  ReplyDelete
 5. கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க

  ReplyDelete
 6. அந்த இத்தாலிய அம்மையாருக்கு இது சொந்த பகை...
  உலகுக்கோ எதோ மூன்றாம் உலக நாட்டின் தீவிரவாத பிரச்சினை..

  அனுபவிக்கும் நமக்கு மட்டும் தான் ரத்த சம்பந்தம்...அவர்களை சொல்லி குற்றமில்லை அய்யா..ஏமாற மட்டுமே தெரிந்தவன் தமிழன்...

  நல்ல கவிதை அய்யா..ஏராளமான ஆதங்கத்தோடு...

  ReplyDelete
 7. வார்த்தைகளின்
  வழியே
  வழிந்தோடும்
  வஜ்ர உணர்வுகள்
  நிச்சயம் ஒருநாள்
  விடியல்
  வந்தே தீரும்
  அது நமக்கு
  சுதந்திரத்தை
  தந்தே தீரும்

  ReplyDelete
 8. //கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
  காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க//
  அருமை!பூதக் கண்ணாடி வேண்டுமோ என்னவோ!

  ReplyDelete
 9. ஒவ்வொரு வரிகளும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

  ReplyDelete
 10. //பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
  பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே//

  கண்டிப்பாக அனைவரும் தொழுவோம்

  ReplyDelete
 11. //கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
  காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
  பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
  பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே//

  நிச்சயம் நடக்குமென நம்புவோம்.

  ReplyDelete
 12. மனம் நடுங்கவைக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாது நடத்திய பக்‌ஷேவை பின்லேடனுக்கு ஒப்பாக சொன்னது சரியே ஐயா.. ஈழம் மலரவேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையும்...

  அன்பு வாழ்த்துகள் ஐயா....

  ReplyDelete
 13. மரபுக் கவிதை மரபுகவிதைதான்!உணர்சிகளைத் தூண்டும் கவிதை!அருமை!

  ReplyDelete
 14. (ராஜபக்சே)வாழும் நரக மனிதன், வாழாது நரகத்திற்கு செல்வது எப்போது?//
  கச்சிதமான கவிதையால்
  கனக்கிறது என் மனம்...

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...