Sunday, October 2, 2011

அண்ணல் காந்தி பிறந்தநாள்



  அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
  அடிமை விலங்கை அகற்றினார் அன்றே
  திண்மை அகிம்சையாம் அறவழி என்றே
  தேடிக்  கொடுத்தார் விடுதலை ஒன்றே
  உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
  உத்தமர் காந்தி செய்தார் தொண்டே
  மண்ணில் பிறந்த மாந்தரில் எவரே
  மாகாத்மா வாக மதித்தது!  இவரே!
 
  நிறவெறி தன்னை நீக்கிட வேண்டி
  நீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி
  அறவழிப் நடந்து ஆப்பிரிக்க நாட்டில்
  அல்லல் பட்டது காண்போம் ஏட்டில்
  தீண்டா மையெனும் தீமையை ஒழிக்க
  தீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க
  வேண்டா மையா சமூக கொடுமை
  விட்டது இதுவரை நம்செயல் மடமை
 
  இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
  ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி
  உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
  உள்ளம் நொந்தவர் உறுதியே பூண்டவர்
  எடுத்தார் விரதம் இறுதி வரையில்
  இறந்து வீழ்ந்தார் முடிவென தரையில்
  கொடுத்தனர்  பாவிகள் குண்டாம்பரிசே
  கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே
 
  எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
  இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி
  புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட உலகம்
  பதவியை நாடா பண்பினில் திலகம்
  சத்திய சோதனை வாழ்வாய் கொண்டே
  சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
  உத்தம உன்புகழ் உலகில் வாழ்க!
  உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

                     புலவர்  சா இராமாநுசம்


 
 

35 comments :

  1. இப்படித்தான் வாழவேண்டும!
    இவர் தான் மனிதர்!
    இதுதான் வாழ்க்கை!

    என்ற அண்ணல் அவர்களின் கொள்கைகளை மதிப்போம் வாழ முயல்வோம்!!

    ReplyDelete
  2. அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
    அடிமை விலங்கை அகற்றினார் அன்றே

    அழகாகச் சொன்னீர்கள் புலவரே....

    ஆனால் இன்று பலர் அந்த விலங்கை கௌரவமாக அணிந்துகொள்கிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை..

    மொழியால்
    பண்பாட்டால்
    உணவால்
    உடையால்
    சிந்தனைகளால்
    கடவுளின் பெயரால்
    மதங்களின் பெயரால்
    சாதியின் பெயரால்
    பணத்தின் பெயரால்...

    என எத்தனை எத்தனை பெயர்களால் இன்று நாம் அடிமைப்பட்டுக் கிட்ககிறோம்...

    இந்த அடிமை விலங்குகளை உடைத்து எறிய யார் வருவார்..???

    நமக்கு நாமே உடைத்தெறிய வேண்டிய விலங்கல்லவா இது..

    சொல்வது யாருக்கும் எளிது..
    சொன்னவாறு நடந்து காட்டிய அண்ணலை

    எண்ணும்போது..
    பெருமையாக இருக்கிறது இந்த மண்ணில் தான் நாமும் பிறந்திருக்கிறோம் என்று...

    கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது அவரது கொள்கைகளை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறோம்.. பின்பற்றுகிறோம் என்று எண்ணும்போது...

    காலையில் நல்ல மனிதரை சிந்திக்கச் செய்த தங்கள் கவிதை அருமை புலவரே...

    ReplyDelete
  3. குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
    கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்
    ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி
    நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட
    அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து
    அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
    ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும்
    உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை.

    என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால்
    எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ

    அன்பின் புலவரே..
    இந்நன்னாளில் என் கண்ணில் பட்ட

    சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்த வலைப்பதிவு ஒன்றைத் தங்கள் பார்வைக்காக..

    முன்வைக்கிறேன்..

    http://tamilnaduthyagigal.blogspot.com/2010_08_26_archive.html

    ReplyDelete
  4. காந்தி ஜெயந்தி அன்று ஒரு அருமையான கவிதை..நன்றி புலவரே...

    ReplyDelete
  5. அண்ணல் காந்திக்கு கவிதையில் ஒரு அஞ்சலி!

    மிக்க நன்றி புலவரே....

    ReplyDelete
  6. இரண்டாம் உலக போருக்கு பிறகு பிறகு காந்தி சுதந்திர போராட்டத்திற்காக ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை என்கிறார் ச.தமிழ்செல்வன்

    ReplyDelete
  7. ஒரு வரலாற்று நாயகனுக்கு கவிதை அர்ப்பணம், வாழ்த்துக்கள் புலவரே....

    ReplyDelete
  8. சத்திய சோதனை வாழ்வாய் கொண்டே
    சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
    உத்தம உன்புகழ் உலகில் வாழ்க!
    உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!//

    தாங்கள் சிந்தைப்படியே நடக்கட்டும்.

    ReplyDelete
  9. முனைவர்.இரா.குணசீலன் sai

    முதல் ஓட்டுக்கும் வருகைக்கும்
    நன்றி முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. முனைவர்.இரா.குணசீலன் said

    விரிவான கருத்துரை வழங்கிய தங்களுக்கு
    மிக்க நன்றி! முனைவரே!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. முனைவர்.இரா.குணசீலன் said

    தாங்கள் குறிப்பிட்டுள்ள வலை
    வரவில்லை முனைவரே
    மீண்டும் முயன்று பார்கிறேன் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ரெவெரி said

    அதிகாலை எழுந்து எழுதி உடன்
    அப்படியே வெளியிடப்பட்டது
    நன்றி!நண்ப!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வெங்கட் நாகராஜ் said...

    நன்றி!நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. suryajeeva said.

    நன்றி!நண்பரே!

    திரு தமிழ்செல்வன் அவர்கள் கருத்தைச்
    சொல்ல அவருக்கு உரிமை உண்டு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ said

    அன்பின் மனோ!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    ReplyDelete
  16. கோகுல் said.

    எடுத்துக் காட்டு தந்து வாழ்த்திய தங்களுக்கு
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் உரையில் ‘காந்தி’ என்ற வார்த்தைகூட உச்சரிக்கபடவில்லை.. இப்படி நிகழ்வது இதுவே முதல்முறையாம் (எதுக்கும் ஒரு தொடக்கம் வேணும் இல்ல மாமு)...

    இதுதான் இன்றைய யதார்த்தம்!

    பணத்தில் மட்டும் அவரது படமில்லை எனில் இந்த சமூகமும் அவரை மறந்திருக்கும்...

    ReplyDelete
  18. சத்திய சோதனை வாழ்வாய் கொண்டே
    சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
    உத்தம உன்புகழ் உலகில் வாழ்க!
    உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

    அருமை

    ReplyDelete
  19. எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
    இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி
    புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட உலகம்
    பதவியை நாடா பண்பினில் திலகம்
    சத்திய சோதனை வாழ்வாய் கொண்டே
    சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
    உத்தம உன்புகழ் உலகில் வாழ்க!
    உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

    அருமை அருமை ஐயா காந்தி ஜெயந்தி இன்று
    நீங்கள் சமர்ப்பித்த இக் கவிதைக்குத் தலைவணங்குகின்றேன்
    மிகக் நன்றி ஐயா பகிர்வுக்கு ..............

    ReplyDelete
  20. குடிமகன் said..

    நன்றாகச் சொன்னீகள் சகோ!

    ஒருவேளை சோனியா காந்தி மேலே
    கோபமாகக்கூட இருக்கலாம்
    நன்றி!

    ReplyDelete
  21. Rathnavel said

    தவறாமல் வந்து வாழ்த்துரை வழங்கும்
    ஐயாவுக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. அம்பாளடியாள் said

    வருகைக்கும் வாழ்த்துரைக்கும்
    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. அம்பாளடியாள் said

    ஓட்டளிப்புக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. நல்ல கவிதை அழகு தமிழில்..

    ReplyDelete
  25. உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
    உத்தமர் காந்தி செய்தார் தொண்டே
    .....................................................................
    இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
    ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி
    உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
    உள்ளம் நொந்தவர் உறுதியே பூண்டவர்

    ///கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே///
    அஹிம்சையின் தவக் குழந்தைக்கு ஹிம்சை அளித்து வழியனுப்ப..
    எப்படித் தான் மனம் வந்ததோ இத்தனை சிறுமையை செய்து முடிக்க...

    உள்ளம் கனக்கச் செய்த உருக்கமான கவிதை...
    மண்ணுள்ளவரை, மானுடன் போற்றும் நமது மகாத்மா புகழை...
    வாழ்க! வளர்க!! மகாத்மா புகழ்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  26. அண்ணலுக்கு ஓர் அழகான கவிதாஞ்சலி!

    ReplyDelete
  27. சீனுவாசன்.கு said..

    வருகிறேன் ஐயா!
    வயதின் காரணமும் தளர்ச்சியும்
    உடனுக்குடன் என்னோடு தொடர்புடைய
    எல்லா வலைகளையும் காணவோ கருத்துரை
    வழங்கவோ நன்றி சொல்லவோ இயலவில்லை
    இக் கருத்து தங்களுக்கு மட்டுமல்ல
    என் பால் அன்பும் மதிப்பும் வைத்துள்ள‍
    அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் உரிய
    வேண்டு கோளாகும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. மகேந்திரன் said

    நன்றி சகோ!

    உங்கள் கவிதையும் மிக சிறப்பா இருந்தது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. தமிழ் விரும்பி said

    நன்றி சகோ!

    உங்கள் கவிதையும் மிக சிறப்பா இருந்தது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. சேட்டைக்காரன் said..

    நன்றி நண்பரே!
    எங்கே இடையில் காணா வில்லை
    சேட்டை அதிகமோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. அழகான கவிதை ஐயா அருமை

    தமிழ் மணம் எட்டு

    ReplyDelete
  32. M.R said...

    நன்றி சகோ!

    உங்கள் பதிவும் மிக சிறப்பா இருந்தது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. நல்ல அழகான கவிதை ஐயா. நல்லா இருக்கு.

    ReplyDelete
  34. மஹாத்மாவுக்கான வரிகள் அத்தனையும் சிறப்பு ஐயா....

    அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...