Wednesday, November 9, 2011

சுகத்தைத் தருவது எந்நாளோகாலில்  ஒட்டிய  சேற்றோடும்- தன்
      கைகளில்  நெல்லின்  நாற்றோடும்
தோலும்  வற்றி  உடல்தேய-என்றும்
     தொலையா  உழைப்பால்  தானோய
நாளும்  அற்றுப்  பலநாளும்-மிக
      நலிந்த  உழவர்  இல்லத்தில்
மூளும் வறுமை தீராதோ-வாழும்
     முறைப்படி வாழ்வதும்  எந்நாளோ

இருண்ட  இரவே  என்றாலும்-தன்
    எதிரே  எதுதான்  நின்றாலும்
மருண்ட  நிலையே  அறியாது-சற்றும்
    மலைத்து  மனமும்  முறியாது
உருண்ட  பந்தாய்  வாழ்வாக-அவன்
    உழைத்துப்  பெற்றது  தாழ்வாக
சுருண்ட  உழவர்  இல்லத்தில்-நல்
    சுகத்தைத்  தருவது  எந்நாளோ

கொட்டும்  மழையே  என்றாலும்-உடல்
    குளிரால்  நடுங்கி  நின்றாலும்
வெட்டும்  மின்னல்  ஒளியாலே-இரு
    விழிகள்  காட்டும்  வழியாலே
கட்டிய  மடைகள்  உடையாமல்-அவன்
    கைகள்  சோர்வு  அடையாமல்
வெட்டிய  மணைக்  கொட்டியவன்-பட்ட
    வேதனை  குறைப்பதும்  எந்நாளோ

பருவம் தவறி மழைபெய்ய- வெள்ளம்
    பாய்ந்து இட்ட பயிரழிய
உருவம் மாறி மேடுபள்ளம்-நில
    உருவே ஆகிடிட கண்டுஉள்ளம்
வருமா வாழ்வில் வளமென்றே-துயர்
    வாட்டிட அந்தோ தினம்நொந்தே
கருவே கலைந்த நிலைபோல-உழவன்
     கண்ணீர் நிற்பது எந்நாளோ
     
காட்டைத் திருத்தி உழுதானே-பெரும்
    கடனும் பட்டே அழுதானே
நாட்டின் பசிப்பிணி போக்குமவன்-ஏதோ
    நடைப்பிணம் ஆனதை நோக்கியவன்
வீட்டில் மகிழ்வு பூத்திடவே-ஆள்வோர்
    விரைந்து அவனைக் காத்திடவே
கேட்டை நீக்குதல் எந்நாளோ-நெஞ்சக்
    குமுறல் போக்குதல் எந்நாளோ

        புலவர் சா இராமாநுசம்
          

45 comments :

 1. காலில் ஒட்டிய சேற்றோடும்- தன்
  கைகளில் நெல்லின் நாற்றோடும்
  தோலும் வற்றி உடல்தேய-என்றும்
  தொலையா உழைப்பால் தானோய
  நாளும் அற்றுப் பலநாளும்-மிக
  நலிந்த உழவர் இல்லத்தில்
  மூளும் வறுமை தீராதோ-வாழும்
  முறைப்படி வாழ்வதும் எந்நாளோ

  வணக்கமையா..
  இந்த விடியலிலேயே இன்னும் விடியாதவர்கள் வாழ்க்கையை கவிதையாக்கியிருக்கின்றீர்கள்.. ஒரு விவசாயி மற்றய உற்பத்தியாளர்கள் போல் எப்போது தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறானோ அப்போதுதான் அவன் வாழ்வு சிறக்கும்.. இங்கு மாட்டுக்கு கூட மானியம் வழங்குகிறார்கள்.. இவர்களோடு போட்டி போடுன்னு உலகமயமாக்களை ஆதரிப்போர் கூறுவதை என்ன செய்யலாம்!!?? நன்றி ஐயா கவிதை பகிர்விற்கு..

  ReplyDelete
 2. இப்படி உலகமயமாக்கல் என்று நமது விவசாயிகளை பாடாய் படுத்தும் அரசாங்கம் மற்றய நாடுகளில் அவர்களுக்கு செய்து கொடுத்திடும் வசதிகளை மறந்திடும்.. நான் வாழும் இந்த நாட்டில் ஒரு விவசாயிக்கு இந்த நாட்டின் அடிப்படைச் சம்பளம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது நமது நாடுகளில் அப்படி கட்டாயம் அவர்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் இல்லையேல் வருங்காலத்தில் உணவுத் தேவைக்காகவும் மற்றய நாடுகளில் கையேந்தும் நிலை வரும்..!!!???

  ReplyDelete
 3. //// உழவர் இல்லத்தில்-நல்
  சுகத்தைத் தருவது எந்நாளோ ////
  இனிய காலை வணக்கம் ஜயா இப்படி ஓரு உழவர் இல்லத்தில் பிறந்த பையன்தான் நான் எனக்கு உங்கள் கவிதை மிகவும் பிடித்திருக்கின்றது

  ReplyDelete
 4. வணக்கம்!

  // பருவம் தவறி மழைபெய்ய- வெள்ளம்
  பாய்ந்து இட்ட பயிரழிய //

  காலத்தே பயிர் செய்தாலும் பருவம் தவறிய மழையால் என்ன பயன்? நன்றாகவே சொன்னீர்.

  ReplyDelete
 5. எத்தனை பிரச்சினைகளை ஒரு விவசாயி எதிர் நோக்க வேண்டியிருக்கிறது. சிந்திக்க வைக்கும் கவிதை ஐயா.

  ReplyDelete
 6. சேற்றில் கால் வைப்பவன் செழுப்படையும் நாளே
  நாடு செழித்ததாக அர்த்தம்
  அவர்களது அவல நிலையை அழகாகச் சொல்லிப்போகும் பதிவு
  அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
 7. காட்டான் said..

  நன்றி!காட்டான் சகோ!

  குண்டூசி கூட உற்பத்தியாளன்
  விலை வைத்தே வெளியில் விற்பனைக்கு
  அனுப்புகிறான் ஆனால் விவசாயி....?
  வியாபாரி தானே விலைவைக்கிறான்
  என்றால் விவசாயி எப்படி வாழமுடியும்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. சுருண்ட உழவர் இல்லத்தில்-நல்
  சுகத்தைத் தருவது எந்நாளோ


  உழைப்பவனுக்கு உலக்கு கூட மிஞ்சாது எனும் அர்த்தம் போல் தங்கள் கவிதை அருமை ஐயா

  த.ம 5

  ReplyDelete
 9. காட்டான் said..

  தங்கள் கூற்று முற்றிலும் உண்மை சகோ!
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. K.s.s.Rajh said..

  சகோ!
  நானும் தங்களைப்போல விவசாயி
  மகன் மட்டுமல்ல விவசாயம் செய்து பட்ட
  துன்பமே இக் கவிதை!
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. தி.தமிழ் இளங்கோ said..

  அன்பரே!
  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. சாகம்பரி said.

  சகோதரி!
  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. Ramani said...

  அவன்!சேற்றில் கால் வைப்பவன்! செழுப்படைய செய்தால்தான் நாம் சோற்றில்
  கைவைக்க முடியும் உண்மை சகோ!
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. M.R said...

  உழரவன் கணக்கு பார்த்தால் உழவுகோல்
  கூட மிஞ்சாது என்பது பழமொழி
  சகோ! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. விவசாயிகளின் வேதனையை இத்தனை அருமையாக தந்துள்ளீர்கள் ...அருமை!

  ReplyDelete
 16. koodal bala said

  அன்பரே!
  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. அழகிய கவிதை அய்யா ..

  ReplyDelete
 18. உழவனின் பிள்ளைகள் கல்வியறிவு பெறும் அந்நாளே..
  சுகம் தரும் நாளாக அமையும்..

  என்பது என் கருத்து...

  ReplyDelete
 19. கவிதையில் உழவனின் நிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் புலவரே..

  அருமை.

  ReplyDelete
 20. விவசாயிகளின் பெருமூச்சு உங்கள் கவிதையில் தெரிகிறது...!!!

  ReplyDelete
 21. விவசாயிகளின் பிரச்சனைகளை ஒன்று விடாமல் எழுதி அழகான கவிதையாகத் தொகுத்துள்ளது, அருமை ஐயா. பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 22. விவசாயிகளின் நிலையை கவிதை வாயிலாக படம்பிடித்து உள்ளீர்கள்..

  மனதை நெகிழ செய்யும் படைப்பு..

  ReplyDelete
 23. உழவர் வாழ்வும் செழிக்கும் அய்யா ...கூடிய விரைவில்...நல்லதொரு ஆதங்க படைப்பு...

  ReplyDelete
 24. ”உழுவார் உலகத்தார்க்காணி” என்றார் வள்ளுவர்.அவர்கள் வாழ்வு சிறக்க வேண்டும்,அருமையான கவிதை.

  ReplyDelete
 25. //மூளும் வறுமை தீராதோ-வாழும்
  முறைப்படி வாழ்வதும் எந்நாளோ//

  ஆண்டாண்டு கால ஏக்கம் அய்யா! கவிதை மனத்தைக் கவர்ந்தது.

  ReplyDelete
 26. பாவேந்தரின் எந்நாளோ கவிதைக்கு நிகரான கவிதை.
  உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன் அய்யா

  ReplyDelete
 27. பருவம் தவறி மழைபெய்ய- வெள்ளம்
  பாய்ந்து இட்ட பயிரழிய
  உருவம் மாறி மேடுபள்ளம்-நில
  உருவே ஆகிடிட கண்டுஉள்ளம்
  வருமா வாழ்வில் வளமென்றே-துயர்
  வாட்டிட அந்தோ தினம்நொந்தே
  கருவே கலைந்த நிலைபோல-உழவன்
  கண்ணீர் நிற்பது எந்நாளோ

  நெஞ்சை நெகிழவைக்கின்றது வரிகள் .
  அருமை!....வாழ்த்துக்கள் மிக்க நன்றி
  ஐயா பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள்
  என் தளத்திற்கும் .

  ReplyDelete
 28. என் ராஜபாட்டை"- ராஜா said...

  நன்றி இராஜா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. என் ராஜபாட்டை"- ராஜா said...

  படித்தேன் இரசித்தேன் சிரித்தேன்!

  நன்றி இராஜா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 30. முனைவர்.இரா.குணசீலன் said...

  உண்மைதான் முனைவரே!

  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. முனைவர்.இரா.குணசீலன் said...

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 32. MANO நாஞ்சில் மனோ said...

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. வை.கோபாலகிருஷ்ணன் said

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 34. வேடந்தாங்கல் - கருன் *! said

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 35. ரெவெரி said...

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 36. சென்னை பித்தன் said

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 37. shanmugavel said

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 38. சிவகுமாரன் said...

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 39. அம்பாளடியாள் said

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 40. ''...கேட்டை நீக்குதல் எந்நாளோ-நெஞ்சக்
  குமுறல் போக்குதல் எந்நாளோ..''
  உழவனின் வேதனை என்றும் தீராத வேதனை. இறைவன் கண் திறந்தாலும் மேலே இருப்போர் கண்திறந்தால் அனைத்தும் நலமே. பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 41. \\வருமா வாழ்வில் வளமென்றே-துயர்
  வாட்டிட அந்தோ தினம்நொந்தே
  கருவே கலைந்த நிலைபோல-உழவன்
  கண்ணீர் நிற்பது எந்நாளோ\\

  உழவரின் மனம் உழலும் நிலையை கரு கலைந்த தாயின் நிலையோடு ஒப்பிட்டு அவரது வாழ்வின் பரிதாபத்தை உணர்த்தியுள்ளீர்கள்.. கவிதை நெகிழச் செய்கிறது ஐயா.

  ReplyDelete
 42. பொருள் முதலும் போட்டு, உழைப்பு மூலதனமும் போட்டு எதற்கு லாபம் வருகிறது என்று கணக்கு சொல்ல யார் இருக்கிறார்கள்... இரண்டையும் கணக்கு போட்டு அவர்கள் கண்ணீர் துடைக்க இது வரை எவரும் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறது என்பது என் எண்ணம்... ஆனால் தாமதமாகி விடுமோ என்ற பயமும் வருவதை தவிர்க்க முடியவில்லை

  ReplyDelete
 43. கழனி வாழ் உழவரின்
  நிலையை அருமையாக
  கவியாக்கியிருக்கிறீர்கள் புலவரே.
  நன்று..
  உழவனவன் துன்பன் தீரும் நாள் வரவேண்டும்
  அப்போதுதான், நாம் உண்ணும் சோறு சேமிக்கும்....

  ReplyDelete
 44. உருண்ட பந்தாய் வாழ்வாக-அவன்
  உழைத்துப் பெற்றது தாழ்வாக
  சுருண்ட உழவர் இல்லத்தில்-நல்
  சுகத்தைத் தருவது எந்நாளோ

  வலி தரும் தகவல்களை மொழி தரும் சுகத்தில் படிப்பதில் தனி சுவைதான்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...