Friday, April 6, 2012

அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!


அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை
   அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை!
வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை
   வளராது பயிரங்கே!துயரே! எல்லை!
களமின்றி விளையாட்டா? எதுவும்இல்லை
    கண்ணற்றார் துயருக்கு ஏது எல்லை!
உளமின்றி செய்வார்க்கு வெற்றி இல்லை
    உணர்வின்றி நடப்பார்க்கும் அதுவே எல்லை!

பொய்சொல்லி வாழ்வதும் வாழ்வா இல்லை
    புறம்சொல்லி திரிவார்க்கும் வருமே எல்லை!
மெய்சொல்லி வரும்துன்பம் உண்மை யில்லை
    மேதினியில் அவர்வாழ்வே புகழின் எல்லை!
செய்நன்றி மறந்தார்க்கும் உயர்வே யில்லை
     சினம்காக்க தவறினால் அழிவே எல்லை!
தொய்வின்றி உழைப்பார்க்கு தோல்வி யில்லை
     தோற்றாலும் முயற்சிக்கு இல்லை எல்லை!


விதியென்ற சொல்லுக்கு வலிமை இல்லை
     வீணென்று புறந்தள்ளி நடப்பின் எல்லை
மதிவென்று வாழ்வுகுத் தாழ்வேஇல்லை
   மட்டற்ற மகிழ்வுக்கே காணார் எல்லை!
எதுவொன்றும் குறையின்றி ஆயின், இல்லை
     இனிதென்ற சொல்லுக்கு, வாழ்வில் எல்லை!
இதுவென்று சொல்பவர் யாரும் இல்லை
     இவ்வண்ணம் செயல்படின் உண்டோ எல்லை!

                    புலவர் சா இராமாநுசம்
   


14 comments :

  1. அருமை ஐயா!,
    வாழ்வியல் சிந்தனையை,வளமான கவிநடையில்,அழகாக சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. எம் விழி வாசிக்கும் கவியெல்லாம் கவியா - இல்லை
    எம் அன்பிற்கினிய புலவர் உம்மின் கவியே மரபின் எல்லை....

    அழகான கவி ஐயா.
    ஐயா,
    நேற்று நீங்கள் எம் தளம் வந்து உரைத்த கருத்தினை பார்த்து
    தங்கள் தளம் திறந்து பார்த்தேன். நான் எந்த ஒரு தடங்களையும் சந்திக்கவில்லை. நன்றாக திறந்தது தங்கள் தளம்..
    சில நேரங்களில் கூகிளின் செயல்பாடுகள் நம்மை
    வெறுப்பேற்றத்தான் செய்கின்றன...

    ReplyDelete
  3. விருத்தக் கவி வேந்தே,
    வணக்கம் நலமா?

    மனிதப் பண்புகளை நாம் எவ்வாறு அளவோடு கடைப்பிடித்து வளமோடு வாழனும் என்பதனை இவ் அழகிய விருத்தக் கவி சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  4. நன்னெறி கூறும் அழகான கவிதை தந்திருக்கிறீர்கள் ஐயா

    ReplyDelete
  5. //களமின்றி விளையாட்டா? எதுவும்இல்லை
    கண்ணற்றார் துயருக்கு ஏது எல்லை!//

    சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.... வளமோடு வாழ்ந்தால் நல்லது என்பதை அழகிய கவிதையாக எழுதிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. பாடல் அருமை ஐயா!

    அளவின்றி உண்டேன் அழகிய பாட்டை
    வளமொன்றி வாழ்த்தினேன்! வாழ்!

    ReplyDelete
  7. இல்லை இல்லை யென்றே சொல்லி, வாழ்வில் இருக்கின்ற நம்பிக்கையைப் பட்டியல் போட்ட கவிதை!

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா!!
    நல்லதோர் கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா!!

    ReplyDelete
  9. ஒவ்வொரு வரியிலும் நின்று அவதானித்து வாசித்து மனதில் பதிய வைக்கிறேன்.அத்தனை அற்புதம் மூத்தோர் சொல் அமுதம் !

    ReplyDelete
  10. அற்புதமான உள்ளம் தொடும் வரிகள். உளமின்றி செய்வார்க்கு வெற்றி இல்லை - மிகச் சிறப்பு.
    இருப்பினும் எதையெல்லாம் தமிழ் பழித்து கூறியதோ அவற்றை எல்லாம் மிக பல செய்தும் பலர் அவர்களையே விரும்புவதும், செய்தவர் மேலும் மேலும் அநீதி செய்து வருவதும் கண்கூடு. இயற்கை மாறிவிட்டதோ என்ற மலைப்பு ஏற்படுகிறது.

    ReplyDelete
  11. செய்நன்றி மறந்தார்க்கும் உயர்வே யில்லை
    சினம்காக்க தவறினால் அழிவே எல்லை!
    தொய்வின்றி உழைப்பார்க்கு தோல்வி யில்லை
    தோற்றாலும் முயற்சிக்கு இல்லை எல்லை!//
    முத்தான வரிகள் ஐயா அருமை அருமை .

    ReplyDelete
  12. அருமையான வார்த்தை சொல்லாடல் என்பது இதுதானா?வியந்து நிற்கிறேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...