இனிய உறவுகளே! வணக்கம்!
தம்பி முத்துநிலவன் அவர்கள் தன் வலையில், முகநூல் பதிவுலகை
அழிக்கிறதா என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்! அவர் கேள்வி சரியானதே! முடிவில் அவர் கொண்ட அச்சத்திற்கு, உரிய முடிவும்(பதிலும்)அவரே , கூறியுள்ளது, மிகவும் நன்று!
என்னுடைய கருத்தும் அதுவே! கடந்த திங்கள் நானும் , என்னுடைய
மனதில் தோன்றிய அச்சத்தின் காரணமாக ஒரு கவிதையை( என்வலையில்)
எழுதி, என் ஆதங்கத்தை அதில் வெளிப்படுத்தியுள்ளேன் பலரும், ( குறிப்பாக பதிவர்கள்) படிக்க வேண்டும் என்பதற்காக, அக்கவிதையை , மீள் பதிவாக
மீண்டும் இங்கே வெளியிடுகிறேன்!
வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!
நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!
புலவர் சா இராமாநுசம்