Tuesday, January 15, 2013

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!




மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்
              

7 comments :

  1. அருமை அய்யா.. வரிகளில் பொங்கலின் இனிமை..

    ReplyDelete
  2. ஆமாங்கஐயா. உண்மைதான். இப்ப அவங்களைத்தான் யாருமே கண்டுக்கிட மாட்டெனுங்கறாங்களே? என் பக்கமும் வாங்க ஐயா.

    ReplyDelete
  3. உழவர்களுக்கு உறுதுணையான கால் நடைகள் பற்றி நகரில் வாழ்வோர் அறிய வாய்ப்பு குறைவு. அவைகளின் பெருமைகளை போற்றி எழுதிய தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நாம் தொழுதிட உரியவன் உழவன்.... உண்மை தான் ஐயா..

    சிறப்பான கவிதை.

    ReplyDelete
  5. உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
    உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
    தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
    தொழுதிட உரியவன் உழவன்!

    தொழுதிட வேண்டிய அருமையான வரிகள் புலவர் ஐயா.
    த.ம. 3

    ReplyDelete
  6. உழைப்பின் மேன்மை சொல்லும் உயர்ந்த கவிதை

    ReplyDelete
  7. கவிதை மிகவும் அருமை...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...