Wednesday, April 9, 2014

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென



ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

11 comments :

  1. காசு கொடுத்து ஓட்டுவாங்கும் மானம்கெட்ட அரசியல்வாதிகள் எங்கே விலைவாசியை குறைக்கப் போகிறார்கள் ?போட்ட முதலை விட பல மடங்கு எடுப்பதுதான் அவர்கள் குறி !
    த ம 1

    ReplyDelete
  2. பதவி ஆசையில் தான் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள்! பதவிக்கு வந்து சம்பாதிக்க நினைப்பவர்கள் விலைவாசியை பற்றி கவலைப்பட மாட்டார்கள்! சிறப்பான கவிதை! நன்றி ஐயா!

    ReplyDelete
  3. அவர்களுக்கு இந்த நினைவே வராது ஐயா...

    ReplyDelete
  4. "சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
    சென்றதும் என்ன செய்கின்றீர்
    தேவை உமக்கெதோ தேடுகின்றீர்" என்றவாறு தான்
    அரசியல்வாதிகளின் போக்கு நகருகிறதே!
    வாக்குப் போடும் நம்மாளுகளே பாவம்!

    ReplyDelete
  5. அருமையான கவிதை ஐயா....

    ReplyDelete

  6. வணக்கம்!

    இன்றைய ஆட்சி இழிவுகளைச் சாடியே
    குன்றிணை பாக்கள் கொடு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

    ReplyDelete
  8. வலைச்சரம் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  9. நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
    நாளும் மக்கள் அதைப்பேசி
    நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
    நீங்கா வேதனை மனதூன்றி
    பஞ்சென அடிபட வாழ்கின்றார்///உண்மையோ உண்மை

    ReplyDelete
  10. நல்ல கவிதை. அவர்களுக்குத் தேவையெல்லாம் பதவியும், பணமும் தானே.....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...