ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்