Wednesday, June 18, 2014

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணிhd
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு
 

12 comments :

  1. மிக மிக அருமையான ஆக்கம் ஐயா !

    பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
    பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
    வேதனை தீரும் வழிகாண்பீர்-எனில்
    வீணே நீரும் பழிபூண்பிர்
    சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
    சொல்ல இயலா நெருக்கடியே
    நாதம் இசைத்தே படைபோல-எமை
    நாடி வருமோர் தினம்போல //

    ஒவ்வொரு வரியிலும் உண்மையின் சாடல்
    உயிர்த் தரித்து நிற்கிறது .உடனும் ஆவனை செய்ய வேண்டும்
    சுத்தம் சுகம் தரும் வரை .

    ReplyDelete
  2. தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
    தடைபட அந்தோ! மிகநாறும்//உண்மைதான் அய்யா .மழை வரும்முன்னே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  3. இங்கே நம் மக்கள் செய்யும் அவச் செயல்கள் தான் காரணம்.... இவர்களை பொறுத்தவரையில் இவர் வீட்டிலும், வீட்டு முன்னும் குப்பை இருக்க கூடாது, வேறு எங்கு வேண்டுமானாலும் கொட்டிக் கொள்ளலாம் எனும் எண்ணம்.

    ReplyDelete
  4. வேதனை தீரும் வழி விரைவில் காண வேண்டும் ஐயா...

    ReplyDelete
  5. நகர ஆட்சிக்கு இப்பாவை
    சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

    நம்மால் இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதை அழகாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா.

    இந்த மீள்பதிவை மீண்டும் மீண்டும் அரசாங்கம் போட வைக்கிறது!

    ReplyDelete
  6. வணக்கம் !
    அன்பின் இராமனுஜம் ஐயா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ்
    வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் .

    ReplyDelete
  7. எங்கு காணிலும் குப்பையடா-
    இந்நிலை என்று மாறுமோ

    ReplyDelete
  8. மீள் பதிவு என்றாலும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டிய பதிவு தான் ஐயா....

    த.ம. +1

    ReplyDelete
  9. மாநகர ஆட்சிக்கு
    எட்டிச்சோ எட்டலையோ
    மக்கள்
    சுகாதாரம் பேணுதல்
    நலமே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...