Friday, January 16, 2015

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே !மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்

11 comments :

 1. மாட்டுக்கும் பொங்கலா என்று கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு மிருகத்திற்கு நன்றி செய்யும் குணம் தமிழனுக்கு உண்டு. இந்த பண்டிகைகளை சிறுவனாக, கல்லூரி மாணவனாக நான் எங்கள் கிராமத்தில் அனுபவித்து உள்ளேன்.

  ட்ராக்ட்டர் வந்ததினால் மாடுகள் பற்றிய புரிதல் சென்னைத் தமிழனுக்கு இல்லை; இங்கு, மேளை நாடுகளில் ட்ராக்ட்டர் வரும் முன் குதிரைகள்; குதிரைகள் என்றால் ஜாம்பஜாரில் இருக்கும் ஜட்கா வண்டி குதிரைகள் அல்ல--

  ஆம்! இங்குள்ள குதிரைகள் யானை மாதிரி இருக்கும்-உழவிற்கு அப்போ அவைகள் தான்.

  ReplyDelete
 2. இயந்திர மயம் ஆகிவிட்ட இந்த காலத்திலும் கூட நன்றி மறக்காது நம் தமிழினம் ,இன்றைய பண்டிகையே அதற்கு சாட்சி :)
  த ம 1

  ReplyDelete
 3. வணக்கம்
  ஐயா.
  உண்மையான வரிகள் ஐயா. மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கவிதை நன்றாக உள்ளது...
  த.ம 2
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. // மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
  மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
  நாட்டுக்கே உரியதாம் அருமை!//

  உண்மைதான் ஐயா. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அருமை ஐயா கவிதை
  இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 6. பாடு பொருள் மாடு..
  அதற்கு ஈடு பொருள் ஏது...!


  அழகிய வரிகள்...!
  இனிய உழவர்திருநாள் வாழ்த்துக்கள் ஐயா..!

  ReplyDelete
 7. வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
  வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
  விரைந்திட ஓட்டுவார் இல்லமஃ....


  ரசித்த வரிகள்... அருமை

  ReplyDelete
 8. ஏர்பூட்டி அதிகாலையில்
  உழவு வைத்தோம்...

  மாடுகளை விளங்கென்று
  பாராமல் பேர்வைத்தோம்...

  நிலத்தில் வியர்வைசிந்தி
  நெல்லென்ற பொன் செய்தோம்...

  விளைச்சலை சரியாய்பிரித்து
  யாவருக்கும் பங்குவைத்தோம்...

  நன்றிக்கென்றே தை நாளில்
  ஊர்கூடி விழா என்றோம்...

  அதனாலே தமிழரென்று
  பாரினில் தனித்து நின்றோம்...

  ‪#‎இனிய‬ மாட்டுப்பொங்கல்
  நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. மாட்டுப் பொங்கல் கவிதை அருமை ஐயா...

  ReplyDelete
 10. முத்தான சொற் குவியல் கொண்டு வடித்த பாமலை கண்டு
  உள்ளம் பூரித்து நிற்கின்றது ஐயா ! வாழ்த்துங்கள் நாமும்
  தங்களின் ஆசி பெற்றுத் தமிழ்த் தொண்டு புரிந்திட எந்நாளும் .

  ReplyDelete
 11. ஒவ்வொரு வரியும் ரசித்தேன் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...