தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொலையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன் காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள்
மறுத்தால் வாழ்வே சுடுகாடே
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும் கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீராப்
பழியும் வருமுன் கவிப்பெண்ணே!
புலவர் சா இராமாநுசம்

