Showing posts with label தேர்தல் கூத்து கவிதை புனைவு. Show all posts
Showing posts with label தேர்தல் கூத்து கவிதை புனைவு. Show all posts

Tuesday, March 11, 2014

தேர்தலோ தேர்தல்!



 தேர்தலோ  தேர்தல்!

நல்லோரே நல்லோரே வாரு மிங்கே-தேர்தல்
நாடக ஒத்திகை பாரு மிங்கே
வல்லோரே வைப்பதே சட்ட மாக-ஆள
வந்தவர் போடுவார் கொட்ட மாக
பல்லோரே சேருவார் கூட்ட ணியாய்- கொள்கை
பறந்திட தேடுவார் ஓட்டி னியே
சொல்வாரே கூசாமல் நாக்கு மின்றே-பணி
செய்திட நிற்பதாம் நோக்க  மென்றே

தன்னலம் இல்லாதார் ஒன்று  கூடி-பெற்று
தந்தாராம் சுதந்திரம் போரு மாடி
என்நலம் காப்ப தாம் என்றேமனம்-நாளும்
எண்ணுவர் கைகளில் சென்றேதினம்
உன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்
உணராது இருப்பதும் தவறேயென
பொன்மனப் பெரியோரே உணர்ந் திடுவீர்-இந்த
போக்கினை நீக்கிட என்ன வழியே

யாராள வந்தாலும் ஊழல் மட்டும்-இங்கே
உருவாகா நிலைகாணும் சூழல் மட்டும்
வாராது ஒருநாளும் உண்மை யிதாம்-கடந்த
வராலாறு காட்டிடும் தன்மை யிதாம்
சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
செய்வதே உண்மையில் நமதுகடன்
போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்

கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
போட்டியில் கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
போடவும் தருகின்றார் நோட்டேபல
கேட்டிட யாரிங்கே நாதி யில்லை-தட்டி
கேட்டவர் பெறுவதோபீதி யெல்லை
ஓட்டிட போகவே அஞ்சு கின்ற-நிலை
உள்ளதை எண்ணுவீர் கொஞ்ச மின்றே

வந்ததே லாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்
சொந்தமாய் பிடியின்றி போவா ரந்தோ-நல்
சுடுகாடும் இல்லாமல் ஆவா ரந்தோ
சிந்தனை செய்திட வேண்டு முடன்-என
செப்பியே மக்களை தூண்டு முடன்
வந்தனை கூறியே முடித்தே னதை-நெஞ்சில்
வடிந்ததை கவிதையாய் தொடுத்தே னதை

                                    புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...