Thursday, July 16, 2015

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
ஆன்றோர் பழமொழி என்மனதை!
நாடி வந்திட இக்கவிதை-ஐயா
நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
தேவை அளவே நீர்சேர்த்தே!
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
உலகம் ஏத்தி தொழுவாராய்!
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
நன்மை விளையா அதுவரையில்!
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
அகத்தில் அதனைக் கொள்ளுவரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
எந்திரம் போடும் சட்டத்தில்!
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
இவ்விதம் நாளும் சென்றாலே!
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
எரியுமா நமது வீட்டினிலே!
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
தவறின் பஞ்சம் ஈண்டமே!

புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
    உலக வாழ்வே முடங்கிவிடும்!
    வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ!//

    ஆம் ஐயா உழவுத் தொழில் நசிந்துவிட்டால் இந்த உலகமே அழிந்துவிடுமே...நல்ல வரிகள் ஐயா! ஆனால் நம் இந்தியாவின் முதுகெலும்பே உழவுதான் ஆனால் நாம் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம்....
    வேதனை...

    ReplyDelete
  2. வணக்கம்.

    உழவே தலை என்று ஐயன் சொன்னது உண்மைதான்.

    அருமை ஐயா.

    நன்றி

    ReplyDelete
  3. ஏரோட்டம் நின்று போனால் எந்த ஓட்டமும் நின்று போகும்...

    ஒவ்வொரு வரியும் சிறப்பு ஐயா...

    ReplyDelete
  4. உழுவார் உலக்த்தார்க்கு ஆணி அல்லவா?
    அருமை

    ReplyDelete
  5. உழுத கைகளை தொழுதல் நன்று !


    ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை!
    நாடி வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை!
    தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
    தேவை அளவே நீர்சேர்த்தே!
    பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
    படையல் இட்டுத் தொழுவாரே!

    மிகவும் பிடித்த வரிகள் இவை அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  6. உழவை விட்டு நாம் வெகுதூரத்தில் சென்றுகொண்டிருக்கிறோம். விளைவு என்னவாகும் எனத் தெரியவில்லை. அருமையான பதிவு.

    ReplyDelete
  7. தக்க சமயத்தில் சொல்லி இருக்கும் அறிவுரை !

    ReplyDelete
  8. ஆடித்துவக்கம் அருமையான பாடல்.

    ReplyDelete
  9. சிறப்பான வரிகள் ஐயா...

    ReplyDelete
  10. உழவையும் உழவரையும் சிறப்பிக்கும் வரிகள் அருமை ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...