Thursday, October 22, 2015

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும் தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்!



உயிரோடு எரிக்கப் பட்ட இளம் குழந்தைகள் கொடுமை! கவிதை! மீள்பதிவு!
கீழே (இன்றும் பொருந்தும்)

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும்
தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்
வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
மாண்டானே,கோகில்ராஜ் ! சாதி! வெறியில்-அந்தோ
மாறாதா!? இந்நிலையே! நீதி! நெறியில்!


ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே
நாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

 புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. அருமை ஐயா இது இன்னும் எவ்வளவு காலங்கள் பொருந்துமோ.. யார் அறிவார்..
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. மீள்பதிவாக இன்னும் தொடரவேண்டியதாய் நிகழ்வுகள்
    இருப்பது மனதுக்கு மிகுந்த வேதனைதான் ஐயா!

    கவிதை அருமை!

    ReplyDelete
  3. இன்றும் பொருந்தும் மீள் பதிவு

    ReplyDelete
  4. தாளாத துயரத்தை துடைத்தெறிய
    வாளாக வந்தெடுத்தீர் மீள்பார்வை
    வேலாக பாய்ந்தே வேரறுக்கட்டும்
    வேதனை தரும் சாதி மடியட்டும்!
    நன்றி அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. அய்யா இந்தியாவில் இன்னும் என்னென்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என்று தெரியவில்லை. உங்களின் இந்த மீள் பதிவைப் படித்ததும், ”ஜாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே” – என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன..

    ReplyDelete
  6. இன்றும் பொருந்தும் மீள் பதிவு கவிதை.

    குழந்தைகளை எரிக்க எப்படித் தான் மனம் வந்ததோ...

    ReplyDelete
  7. ஜாதி வெறி ,பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் பேயாட்டம் போடுவது கொடுமையிலும் கொடுமை அய்யா !

    ReplyDelete
  8. மிகச்சரியாகச் சொன்னீர்கள் தொற்று நோயே தான் சாதி வெறி.

    ReplyDelete
  9. இன்னும் நாம் பின்னோக்கிச் செல்கின்றோமே என நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  10. இது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் பொருண்ட்க்ஹும் ஏன் என்றால் சாதியும் ஏற்ற தாழ்வும் நம் குருதியில் கலந்த ஒன்று. மாற்றுக்காணும் வழி சரியான கல்வியே. அதுவும் அனைவருக்கும் பொதுவான சாதி வித்தியாசம் பாராத ஏழை பணக்காரன் என்று பகுக்காத கல்வி. அது அனைவருக்கும் சமம் என்னும் முறையில் கட்டாயஇலவசக் கல்வி. கட்டாய இலவச ச் சீருடை கட்டாய இலவச மதிய உணவு என்று இருக்க வேண்டும் இந்தச் சூழ் நிலையில் வளரும் சிறார்கள் ஏற்றதாழ்வு சிந்தனைகள் அகற்றி வளர வாய்ப்புண்டு என்று நான் எழுதி வருகிறேன் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  11. மேலே என்றைக்கும் பொருந்தும் என்றிருந்திருக்க வேண்டும் தட்டச்சுப் பிழை பொறுத்துக் கொள்ளவும்

    ReplyDelete
  12. மனதை வருத்திய நிகழ்வு. பொருத்தமான தருணத்தில் பொருத்தமான கவிதை ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...