Showing posts with label மக்கள் நிவாரணம் மத்திய மாநில உதவிகள் மந்தநிலை கவிதை புனைவு. Show all posts
Showing posts with label மக்கள் நிவாரணம் மத்திய மாநில உதவிகள் மந்தநிலை கவிதை புனைவு. Show all posts

Saturday, December 26, 2015

தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எமைவாட்டும்!



பொங்கிய வெள்ள போயிற்றே-கண்ணீர்
பொங்கும் நிலைதான் ஆயிற்றே!
திங்கள் ஒன்றும் ஆகிறதே-இங்கே
தினமும் நெஞ்சம் வேகிறதே!
எங்கள் வாழ்வும் நலமுறுமா-மழை
இழைத்த அழிவும் வளமுறுமா?
தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி,
தையின் குளிரோ எமைவாட்டும்!


புள்ளி விபரம் போடுகின்றார்-வந்து
போவதும் வருவதாய் ஒடுகின்றார்!
அள்ளிப் போடவும் மனமில்லை-ஐந்து
ஆயிரம் அளிப்பதால் பயனில்லை!
கொள்ளி வைக்கவே பயன்படுமே-எம்
குடும்பமே அதிலே எரிபடுமே!
வெள்ளம் வந்தால் வடிந்துவிடும்-துயர
வெள்ளத்தில் ஊரே மடிந்துவிடும்!

யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
ஏனோ உடமைகள் இழந்திட்டோம்-வாழ
ஏதினி வழியின்றி அழிந்திட்டோம்!
விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
தேனாய் இனித்திட வாழ்ந்தோமே-எட்டு
திசையும் இருண்டிட வீழ்ந்தோமே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...