Saturday, October 14, 2017

வேங்கடவனைப் போற்றும் பாடல்




   ஆதவன் எழுவான் அதிகாலை
      ஆயர் பாடியில்  அதுவேளை
    மாதவன்  குழலை  ஊதிடுவான்!
      மாடுகள்  அனைத்தும்   கூடிடவே
    ஒன்றாய்   கூடிய   ஆவினங்கள்
      ஊதிய  குழலின்  இசைகேட்டு
    நன்றாய்  மயங்கி  நின்றனவே
      நடந்து மெதுவாய் சென்றனவே!
 
   ஆயர்  பாடியில் மங்கையரும்
     ஆடவர்  பிள்ளைகள் அனைவருமே!
   மாயவன் இசையில் மயங்கினரே
     மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
   சேயவன்   செய்த  குறும்புகளே
     செப்பிட இனிக்கும் கரும்புகளே!
   தூயவன்  திருமலை வேங்கடவா
     திருவடி தலைமேல்  தாங்கிடவா !

   ஆயிரம் ஆயிரம்  பக்தர்தினம் 
      ஆடிப் பாடி வருகின்றார்!
   பாயிரம்  பலபல பாடுகின்றார்
      பரமா நின்னருள்  தேடுகின்றார்!
   கோயிலைச்  சுற்றி  வருகின்றார்
     கோபுர தரிசனம் பெறுகின்றார்!
   வாயிலில் உள்ளே நுழைகின்றார்
     வரிசையில் நின்றிட விழைகின்றார்!
 
    எண்ணில் மக்கள் நாள்தோறும்
     ஏழாம் மலைகள் படியேறும்
   கண்ணுக் கெட்டிய தூரம்வரை
     கண்ணன் புகழே போற்றுமுரை
   பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
     பஜகோ விந்தமே செய்கின்றார்!
   விண்ணொடு மண்ணை அளந்தவனே
      வேங்கட உன்னடி தொழுகின்றேன்
        
              புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. அருமை ஐயா மிகவும் இரசித்தேன்

    ReplyDelete
  2. வெங்கட்ரமணா... கோவிந்தா...

    ReplyDelete
  3. நாராயணா! கோபாலா!’
    நாமம் போட்டேன் நாராயணா

    ReplyDelete
  4. நாராயணனைத் தொழாத நாவென்ன நாவே.

    ReplyDelete
  5. அருமையான கவிதை ஐயா...
    ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  6. //சேயவன் செய்த குறும்புகளே
    செப்பிட இனிக்கும் கரும்புகளே!// எளிமை - அருமை !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...