Friday, November 17, 2017

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!



ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழைப்பே வேண்டாம், என்றால் அரசியலில் காலம் தள்ள முடியாதே!

    ReplyDelete
  2. நல்ல பாடம் ஐயா கவிதை நடையில்

    ReplyDelete
  3. நிறையவே வேண்டாம்கள்

    ReplyDelete
  4. அருமை ஐயா
    அருமை
    அனைவரும் நினைவில் கொள்ளவேண்டிய
    பின்பற்ற வேண்டிய அற்புத வரிகள்
    தம+1

    ReplyDelete
  5. இரசிக்க வைத்தன ஐயா
    த.ம.4

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...