Showing posts with label புனைவு கவிதை. Show all posts
Showing posts with label புனைவு கவிதை. Show all posts

Friday, November 17, 2017

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!



ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்

Monday, October 17, 2011

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

           

 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...