மட்டைப் பந்து விளையாட்டே –ஏனோ
மட்டுமா நமது விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்- பொருளைத்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆயிற்றே- முன்னால்
விளைவும் மறந்து போயிற்றே!
கொட்டிக் குவிந்திட பணமதிலே- பலர்
கொடிகட்டி பறப்பதோ தினமதிலே!
கூடிப் பார்த்திட பெருங்கூட்டம் –அதில்
குறைநிறை பேசிட ஒருகூட்டம்!
வாடிக்கை ஆனது இன்றிங்கே –நாளும்
வளர்ந்தால் வருமா நன்றெங்கே!
ஆடிடப் பணமும் பெறுகின்றார்-விளம்பரம்
அளித்திட அள்ளியும் தருகின்றார்!
வாடிடும் பல்வகை விளையாட்டே- அவையும்
வாழ்ந்திடச் செய்வீர் நம்நாட்டே!
புலவர் சா இராமாநுசம்