அனல்காற்று நாள்தோறும் தாங்காத வெய்யில்-
ஐயகோ வழிவதும் தண்ணீரோ மெய்யில்!
புனல்கூட சுடுகிறது தொட்டாலே எங்கும்-அதனால்
புல்பூண்டும் கரிகிவிட வெம்மையது பொங்கும்!
மனம்நோக மாவினமும் பசியாலே வாடும்- வான்
மழையின்றி உயிர்வாழ்தல் எவ்வண்ணம் கூடும்!
தினம்போல இயற்கைதனை அழித்தோமே அன்றோ-செய்த
தீவினையால் இந்நிலையைப் பொற்றோமே இன்றோ!
பருவங்கள் பொய்யாகி மழைமாறிப் போகும்-மேலும்
பாழாக விளைநிலமும் பயிரின்றி ஆகும்!
கருமேகம் வந்தாலும் பலனின்றி செல்ல-கண்டே
கண்ணீரில் விவசாயி குடும்பமே தள்ள!
உருவாகும் புயலாலே அழிவேதான் மிஞ்சும்-என்றே
உலகெங்கும் நாள்தோறும் வரும்செய்தி! துஞ்சும்,!
ஒருவாறு நாமறிய அறிவிப்பே! காண்பீர்! –உடன்
உணர்தினி இயற்கையைக் காத்திடப் பூண்பீர்!
சொய்வோமா!!!?
புலவர் சா இராமாநுசம்