புத்தாண்டே
நீவந்து பிறந்து விட்டாய் –பொங்கும்
பொங்கலெனும் தைமகளாய் இல்லம்
தொட்டாய்!
வாழ்த்தியுனை
வரவேற்க மனமே இல்லை –இன்றே
வரலாறு காணாத
வறட்சி தொல்லை!
ஆழ்தியெமை
சென்றதாம் சென்ற ஆண்டே –இங்கே
ஆடுமாடும் மேய்வதற்கா ?
பயிரும் ஈண்டே!
புத்தாண்டே நீவந்து பிறந்து
விட்டாய்!
பாலுண்டே பழமுண்டே பொங்கல்
வைக்க –புதிய
பச்சரிசி உண்டா
பொங்கல் வைக்க!
நாளுண்டு
வாழ்வதற்கு உண்டா உணவும் –வரும்
நாள்தோறும்
காண்போமே துயரக் கனவும்!
புத்தாண்டே நீவந்து பிறந்து
விட்டாய்!
மூலையிலே
தொழிலாளி முடங்கி விட்டான் –நாள்
முழுவதுமே வேலையின்றி
துயரப் பட்டான்!
ஆலையெலாம்
ஓடாது புழுதி படிய – மக்கள்
அனைவருமே ஓயாது
அழுது மடிய!
புத்தாண்டே நீவந்து பிறந்து
விட்டாய்!
சாலையோரம்
வாழ்பவனைப் பார்க்கும் போதும்-அவன்
சாக்குப்பை பாய்தண்ணில் படுக்கும்
தீதும்!
மாலைமுதல்
காலைவரை பனியில் நடுங்க –காண்போர்
மனமெல்லாம் ஐயகோ!
துயரில் ஒடுங்க!
புத்தாண்டே நீவந்து பிறந்து
விட்டாய்!
தைபிறந்தால்
வழிபிறக்கும் முன்னோர் கூற்றே –அதை
தைமகளே இனியேனும்
நீயும் ஏற்றே!
கைகொடுத்து
காப்பாற்ற வேண்டும் தாயே-செய்யின்
கரம்கூப்பி தொழுவோமே தெய்வம்
நீயே!
புத்தாண்டே நீவந்து
பிறந்து விட்டாய்!
வற்றாது
காவிரிநீர் வருதல் வேண்டும் –மேலும்
வான்மழையும் பருவத்தே தருதல்
வேண்டும்!
கற்றார்க்கும்
ஏற்றபணி கிடைக்க வேண்டும் – நாளும்
கல்லாமைப் படிப்படியாய் அகல வேண்டும்!
புத்தாண்டே நீவந்து
பிறந்து விட்டாய்!
மின்வெட்டு
முற்றிலுமே நீங்கச் செய்வாய் –ஏழை
முகம்மலர பசியின்றி
வாழச் செய்வாய்!
புண்பட்டுப்
போனோமே சென்ற ஆண்டே – நல்ல
புகழ்பெற்றுப் போவாயா ?
இந்த ஆண்டே!
புத்தாண்டே நீவந்து பிறந்து
விட்டாய்!
பொங்கல் நல்
வாழ்த்துக்கள்!
புலவர் சா
இராமாநுசம்

