நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ
நினைவுகள்! அதனால் அத்தொல்லை!
மாற்றி மாற்றி வந்தனவே-மேலும்
மனதில் குழப்பம் தந்தனவே!
ஆற்ற முயன்றும் இயலவில்லை-ஏனோ
அறவே சற்றும் துயிலவில்லை
காற்றில் பறக்கும் இலைபோல-வீணே
கட்டிலில் புரண்டேன் அலைபோல!
எத்தனை மனிதர்கள் வந்தார்கள்-என்
எண்ணத்துல் காட்சித் தந்தார்கள்!
பித்தராய்க் கண்டேன் சிலபேரை-தற்
பெருமையே பேசும் சிலபேரை!
சித்தராய்க் கண்டேன் சிலபேரை-நல்
சிந்தனை ஆளர்கள் சிலபேரை!
புத்தராய்க் கண்டேனே சிலபேரை-எதிலும்
பொறுமை இல்லார் சிலபேரை!
எண்ணம் இப்படி சிதறிவிடும்-என்
இதயம் அதனை உதறிவிடும்
வண்ணம் பலவழி முயன்றாலும்-முடிவில்
வந்தது தோல்வியே என்றாலும்
கண்ணை மூடியே கிடந்தேனே-இரவு
காலத்தை அவ்வண் கடந்தேனே!
உண்மை நிலையிது உரைத்தேனே-அந்த
உணர்வினைக் கவிதையில் இறைத்தேனே!
விடிந்தது இருளும் ஓடிவிட-நெஞ்சில்
விளைந்தநல் அனுபவம் பாடிவிட
முடிந்தது வலையில் ஏற்றிவிட-உங்கள்
முன்னே இன்றும் தவழவிட
வடிந்தது வார்த்தையாம் இப்பாலே-நான்
வணங்கும் தாய்த்தமிழ் கவிப்பாலே!
படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்
படித்திட தந்தேன் அலைவானில்!

