காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க
கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே
பூவிரிய நீர்நிறைந்த வளமை தஞ்சை-இன்று
போயிற்று ஆயிற்றாம் நிலமோ புஞ்சை
வாய்விரிய பேசுகின்றார் மேடை ஏறி-ஆனால்
வரவில்லை ஓரணியில் உள்ளம் மாறி!
காயுண்டு கனிதன்னை எறிதல் உண்டா!-இனியும்
கட்சிகளே !உதிரிகளாய் காணல் தொண்டா
தன்முனைப்பு இல்லாமல் ஒன்று படுவீர் –ஏதும்
தடையின்றி பணிநிறுத்தம் வெல்ல விடுவீர்
துன்புறவே வாழ்கின்றான் உழவன் என்றும்-மேலும்
தொடர்ந்திடவே அணைகட்ட முயல இன்றும்
அன்பிலராம் கர்நாடகர் கேளாக் காதே-மத்திய
அரசுக்கும் இதனாலே வருமாம் தீதே
வன்புடையார் நாமென்று உணரச் செய்வோம்-எதிர்
வருங்கால சந்ததிகள் வாழ உய்வோம்
புலவர் சா இராமாநுசம்

