Sunday, August 14, 2011

சுதந்திரத் தேவியே தரவேண்டும்

      பாருக்  குள்ளே  நம்நாடே-புகழ்
          பாரதம்!  உண்டா அதற்கீடே
      ஊருக்கு ஊரே!  கொடியேற்றி-இன்று
          ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
      பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
          போற்றியே  புகழ்ந்து மறுநாளே
       யாருக்கும் நினைவில் வாராதே-இனி
          என்றும் இந்நிலை மறாதே

      வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
        வந்தே  மாதரம்   ஊருக்காம்
      தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
         தன்னல மிக்கோர் ஈண்டுசில
      சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
         செப்பும் நிலையே  ஆனதென
      நிந்தனை செய்து என்னபலன்-இந்த
          நிலையை மாற்ற எவருமிலன்


      வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
          வேதனை  தீர்ந்தது  என்றாலும்
      கொள்ளையர் சிலர்கை  அகப்பட்டோ-நாளும்
          கொடுமை அந்தோ மிகப்பட்டே
      தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
          தொடர்கதை யாகப் போயிற்றே
       எல்லை  மீறின்  தன்னாலே-நாம்
          இழப்போம் அனைத்தும் பின்னாலே
 
       
       கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
          கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
       கள்ள  வாணிகம் சுதந்திரமே-பொருள்
           கலப்படம் செய்யவும் சுதந்திரமே
       வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
           விடுதலை நோக்கி நடைபோட
       நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
          நாளில் வரமே தரவேண்டும்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...