Monday, August 10, 2015

போக்கிடமே ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி புலம்புவதா ? ஆவனவே செய்வீர் தாங்கள்!


சாக்கடையும் குடிநீரும் கலந்து வருதே-மனம்
சகிக்காத நாற்றமிகத் தொல்லை தருதே!
நீக்கிடவே முடியாத மேயர் ஐயா –உடன்
நேரில் ஆய்ந்து பாருங்கள் பொய்யா மெய்யா?
நோக்கிடுவிர் தொற்றுநோய் பரவும் முன்னே-மக்கள்
நொந்துமனம் வருந்திடவும் செய்வார் பின்னே!
போக்கிடமே ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி
புலம்புவதா ? ஆவனவே செய்வீர் தாங்கள்!


மழைநீரின் வடிகால்வாய்  நகரில் முற்றும் –வடிவதிலே
மந்தகதி! இன்றும்! பயனில் சற்றும்!
அழையாத விருந்தினராய் கொசுவின் கூட்டம் –பெரும்
அலையலையாய் வந்தெம்மை தினமும் வாட்டும்!
பிழையேதும் செய்யவில்லை ஓட்டே போட்டோம் –உயிர்
பிழைப்பதற்கே யாதுவழி!? ஐயா கேட்டோம்!
கழையாடும் கூத்தாடி ஆட்டம் போன்றே –வாழ்வு
காற்றாடி ஆடுவதைக் காண்பீர் சான்றே!

நாள்தோறும் விலைவாசி நஞ்சாய் ஏற –ஒரு
நாள்போதல் யுகமாக எமக்கு மாற!
ஆள்வோர்க்கும் குறையொன்றும் எட்ட வில்லை-மேயர்
ஐயாவே நீரேனும் தீர்பீர் தொல்லை!
குடிநீரின் குறைதன்னை போக்க வேண்டும்–தீரா
கொசுத்தொல்லை! இல்லாமல் நீக்க யாண்டும்!
விடிவதனை எதிர்பார்த்து நாளும் காத்தேன் –இரவு
விழிமூட இயலாமல் கவிதை யாத்தேன்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, August 6, 2015

மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே!


மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே
மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே
வீணலவே! விளம்புவது உண்மை ஒன்றே
விளக்கமுற வருங்காலம் காட்டும் நன்றே
காணவென காட்சிபல காண்பீர்! இங்கே
கட்சிகளும் அறப்போரில் ஏற்றார் பங்கே!
பேணலரும் செயலெனும் உம்மால் முடியும்
பெருமைவர வாழ்த்திடுவர்! துயரம் விடியும்!


ஏதுமினி இலவசத்தால் பயனே இல்லை
எண்ணிடுவீர்! அதனாலே வந்தத் தொல்லை
போதுமினி மக்களவர் உழைத்து வாழ
பூரணமாய் மதுவிலக்கு நாட்டில் சூழ!
தீதுமினி நடவாது செய்வீர் ஈண்டும்
தெய்வமெனத் தாய்க்குலமே போற்ற யாண்டும்!
யாதுமினி செய்வதற்கு தருணம் இதுவே
யாவருக்கும் தெரியுமிது ஒழிய மதுவே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 5, 2015

நான்காவது பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!
முதற்கண் இவ்வாண்டு ,நான்காவது
பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த புதுக் கோட்டை மாவட்டம் முன் வந்துள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் வரும்
அக்டோபர் மாதம்( 10 ,11 ,தேதிகள் ) என தற்போது திட்டமிடப் பட்டுள்ளது.அன்புத் தம்பியும் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் ஆகிய,திருமிகு முத்து நிலவன் முன் வந்து பொறுப்பெடுத்து நடத்துகிறார் அதுபற்றி கலந்துரையாட அவரே நேரில்
இங்கு (அதற்காகவே ) வருகிறார்
 

எதிர் வரும் சனிக்கிழமை(8--8-2015) காலை பத்து மணி அளவில் கே-கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ,இக்கூட்டம் நடை பெறும்! அனைவரும் வருகை தர வேண்டுகிறேன்
இதற்கான அழைப்பு அனைவருக்கும் அன்புத் தம்பி அரசன்
அவர்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்
படி, கீழே........

அனைவருக்கும்
இந்த வருட பதிவர் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது, ஆகையால் ஏற்கனவே இரண்டு முறை நடத்திய அனுபவம் இருப்பதினால், சென்னை பதிவர்களாகிய நம்முடைய கருத்துக்களையும் அறிந்து கொள்ள திரு. முத்துநிலவன் அவர்கள் விரும்புகிறார். அதன்படி வருகிற சனிக்கிழமை - 08/08/2015 காலை 10 to 12 மணிக்கு டிஸ்கவரி புக் பேலசில் ஆலோசனைக் கூட்டம் நிகழ இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

 புலவர்  சா  இராமாநும்

Saturday, August 1, 2015

மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை மேலும் தொடராது ஓய ஈண்டும்!


காந்திய வாதியாய் மதுவை நீக்க-வாழ்ந்த
காலமெலாம் போராடி உயிரைப் போக்க!
வாந்தியாய் இரத்தமே சிந்தி விட்டார்-செய்தி
வந்திட நல்லோரும் கண்ணீர் விட்டார்!
சாந்தமே உருவான சசிபெருமாள் இன்றே-மறவா
சரித்திர நாயகன் ஆனார் நன்றே!
ஏந்திய கொள்கையில் மாற்ற மில்லை- அதில்
எள்ளவும் தன்னலம் என்றும் இல்லை!


எத்தனை முறையோ உண்ணா விரதம்-அவர்
இருந்துமே பயனின்றி போன விதம்!
இத்தகை முடிவிக்கே அவரும் வந்தார்-அந்தோ
இன்னுயிர் தன்னையும் பலியாய் தந்தார்!
சித்தமே கலங்கிட துயரம் பொங்கும்-உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இங்கும்!
மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை
மேலும் தொடராது ஓய ஈண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 30, 2015

உலகம் போற்றும் மாமேதை –இன்றவர் உடலை அடக்கம் செய்கின்றார்!


உலகம் போற்றும் மாமேதை –இன்றவர்
உடலை அடக்கம் செய்கின்றார்!
திலகம் இந்திய நாட்டுக்கவர் –மக்கள்
தேம்பியே கண்ணீர் பெய்கின்றர்!
கலமாம் அப்துல் பெயரென்றும்-காலக்
கல்லில் பொறித்த நிலைநின்றும்!
வலமாய் வருவார் உலகெங்கும்-அவரால்
வளர்ந்த அறிவியல் வளம்பொங்கும்!


தோல்விக்குத் தோல்வி தந்துடுவீர்-எந்த
துறையிலும் வென்றே வந்திடுவீர்!
பால்நிற மனமே கொண்டவராம் –காலாம்
பாரத இரத்தினா விண்டவராம்!
ஆலெனப் விரிந்திட அறிவியலை-நாட்டில்
அணுவினை ஆய்ந்து பொறியியலை!
நூல்பல கற்றே உரைத்தாரே-மதிமிகு
நுட்பத்தில் அக்கினி படைத்தாரே!

மாணவ ரோடு மாணவராய்—நாளும்
மகிழ்வாய் கலந்து தானவராய்!
காணவே வாழ்ந்தார் இறுதிவரை-பாவி
காலனால் முடிந்தது! இறுதியுரை!
பதவிக்கிப் பெருமை இவராலே—மனிதப்
பண்புக்கு பெருமை இவராலே!
உதவிக்கு அழைத்ததோ விண்ணுலகே-வாழும்
உத்தம மறவா மண்ணுலகே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 28, 2015

இந்திய நாட்டின் தலைமகன் ஆனார் சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!



அந்தோ மறைந்தார் அப்துல் கலாமே
நொந்தார் அனைவரும் நோகார் இலமே!
இந்திய நாட்டின் தலைமகன் ஆனார்
சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!

கனவும் மெய்படக் காணாது ஏக
நினவாய் என்றும் நிலையென ஆக!
மனமெனும் திரையில் மறையா ஓவியம்
இனமது தமிழரின் இதய காவியம்!

வாழ்கநீர் கால வரலாற்றில் ஒன்றென
சூழ்கவே உம்புகழ் சுடர்தரும் கதிரென!
ஆழ்கஉம் அறிவியல் அலைமிகு கடலென
மூழ்கிடாக் கலமே அப்துல் கலாமே!

புலவர் சா இராமாநுசம்

Monday, July 27, 2015

சின்னப் பையன் வருவானே-தினமும் செய்தித் தாளும் தருவானே!



சின்னப் பையன் வருவானே-தினமும்
செய்தித் தாளும் தருவானே!
சன்னல் வழியும் எறிவானே –கதவு
சாத்திட குரலும் தருவானே!
இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
பாடம் படிக்கும் வயதன்றோ!?
துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
துரத்த ஓடும் வயதன்றோ!
அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
அறுத்த செருப்புக் காலோடும்!
தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
தவறின் திட்டும் பெறுவானே!

சட்டம் போட்டும் பயன்தருமா-கல்வி,
சமச்சீர் ஆகும் நிலைவருமா?
இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
திட்டம் மட்டுமே போடுகின்றார்-அவர்தம்
தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
கொடிகட்டிப் பறக்குது! நாதியிலே!

இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
இருந்திட வேண்டும் ஒரேமுறை
நம்மைஆள தேர்தல்முறை-இன்று
நடைமுறைப் படுத்தும் அந்தமுறை
அமையக் குரலும் தொடுப்பீரே-கல்வி
ஆணையம் அமைத்து கொடுப்பீரே
சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...