Tuesday, March 1, 2016

வள்ளுவர் காட்டும் காதல் நுட்பம்!


உறவுகளே!
பெண்கள் தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்வதிலே உள்ள ஒரு நுட்பம் அவர்களுக்கே தெரியாத ஒன்றை வள்ளுவர் தன் குறளில் எப்படி விளக்குகிறார் பாருங்கள்!
கண்களுக்கு மை தீட்ட பெண்கள் ஒரு குச்சியில்(கோல்) மையைக் குழைத்து, தன் கண்களுக்கு அருகில் கொண்டு சென்று கண்ணை மூடி மை தீட்டுவார்கள் அதுபோது கோல் அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா! இதனை.....
பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை தலைவிக்கு கடுங்கோபம்! தோழியிடம் புலம்புகிறாள்! வரட்டும்! பேசமாட்டேன் விரும்பியல்ல, திரும்பிக் கூட பார்க மாட்டேன் என்பதுபோல, இன்னும் பல!
தோழி ஏதும் கூறாமல் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்! தலைவன் வருகிறான் தேர்வரும் சத்தம் தெருவில் கேட்கிறது! தலைவியிடம் பரபரப்பு! வாசலுக்கு ஓடி வருகிறாள்!தலைவன் இறங்குகிறான் கருத்து சற்று உடல் மெலிந்து காணப்பட்ட அவனைக் கண்டு தலைவி உருகி உருகி ஓடி ஓடி உபசரிக்கிறாள்! தலைவன் ஓய்வெடுக்க , அனைத்தையும் கண்டு கொண்டிருந்த தோழி தலைவியைப் பார்த்து ஏளனமாக சிரிக்க வெக்கப் பட்ட தலைவி சொன்ன பதில்!! வள்ளுவர் குறளில் ----!
தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட மை பற்றிய செய்திக்கு வருவோம்
குச்சியில் மையைக் குழைத் கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் வரை தெரியும் குச்சி ,கண்ணை மூடி மையைத் தீட்டும் போது தெரிவதில்லை!
அதுபோல , தலைவன் பிரிந்த ஏற்பட்ட வருத்தம் கோபம் எல்லாம் அவனை நேரில் கண்டதும் மறைந்து விட்டதே என்பதாம்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட விடத்து- குறள்
        பல பெண்களே அறியாத , நினைக்காத நுட்பத்தை வளுவப் பெருந்தகை , எடுத்து கையாண்டுள்ள சிறப்பு வியக்கத் தக்கதல்லவா!  மேலும்...


உறவுகளே!
           நான் எழுதிய கருத்தை உள்ளடக்கிய குறள்! இதோ, மற்றொன்று!
தோழி, கேட்பாயாக !தலைவனைக் நேரில் காணும் போது, அவர் செய்த தவறுகள் எதுவுமே தெரிவதில்லை! காணாத போது தவறுகளத்தவிர பிற தெரிவதில்லையே! என் செய்வேன் என்று புலம்புகிறாள்!
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை,- குறள்
 புலவர்  சா  இராமாநுசம்

Monday, February 29, 2016

முகநூல் பதிவுகள்!



முப்பால் என்று அழைக்கப்படும் , திருக்குறளில் காமத்துப்பால் பற்றி சில கருத்து வேறுபாடுகள் ,அதாவது காமம் என்றாலே அது ஒரு வெறுக்கத் தக்க சொல் என்பது போல பேசுவதுண்டு! ஆனால் வள்ளுவர் காதலைத்தான் காமம் என்று குறிப்பிடுகிறார் அவர் வாழ்ந்த காலத்தில் அதுதான் வழக் காறாக இருந்தன! அவர் காதலைப்பற்றி, அதன் உணர்வுகளை , எவ்வளவு நுட்பமாக நாகரிகமாக நயம்பட எழுதியுள்ளதை படிப் பவர் பாராட்டாமல் இருக்க இயலாது . நாளை முதல் அவை பற்றி ஆய்வோம்!

உறவுகளே!
வணக்கம்! நேற்று, நான் வள்ளுவரின் காமத்துப்பால் பற்றி எழுதியிருந்தேன்!அதனை மு.வ போன்ற அறிஞர்கள் இன்பத்துப்பால் என்று குறிப்பிடுகின்றார்களே ,என உறவுகள் சிலர் கூறியுள்ளனர் ! எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதானே! சொல்வதின் நோக்கம் காதலைத்தானே! அதாவது, போத்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போத்தினாலும் நோக்கம் போத்திக் கொள்ள வேண்டும் என்பதுதானே! 

   புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, February 23, 2016

மாற்றுத் திறனாளிகளுக்காக மனம் வருந்தி எழுதிய கவிதை!




மாற்றுத் திறனாளிகளுக்காக, மனம் வருந்தி எழுதிய கவிதை!

கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற
கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது!
எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று
வீதிக்கு வந்தபின்பும் அந்தோ வாட்டும்!
பண்பில்லா அரசாக இருக்க லாமா-என்ன
பாவமவர் செய்தார்கள்! துயரம் போமா!
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும்
காதில்லார் அரசென்றால் ? துயரா? போகும்!


புலவர் சா இராமாநுசம்

Sunday, February 21, 2016

தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும் தனக்கென நற்குணம் மிகவுடையாள்




உறவுகளே! வணக்கம்!
இன்று, எனை தவிக்க விட்டு, மறைந்த துணைவி , (மருத்துவர் , பிரமீளா
எம்.பி.பி, எஸ், டி.ஜி.ஓ )அவர்களின் பிறந்தநாள் ,ஆகும் அவர் நினைவாக நான் முன்னர் எழுதிய கவிதை------

தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும்
தனக்கெ
நற்குணம் மிகவுடையாள்
இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
எவருக்கும் மறுப்பு கூறாமல்
என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
ஏழைக்கே மருந்து தந்திடுவாள்
அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
அறிந்திட இயாலாப் பாவழியே!


புலவர் சா. இராமாநுசம்

Saturday, February 20, 2016

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி


நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 17, 2016

படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள் படித்திட தந்தேன் அலைவானில்!



நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ
நினைவுகள்! அதனால் அத்தொல்லை!
மாற்றி மாற்றி வந்தனவே-மேலும்
மனதில் குழப்பம் தந்தனவே!
ஆற்ற முயன்றும் இயலவில்லை-ஏனோ
அறவே சற்றும் துயிலவில்லை
காற்றில் பறக்கும் இலைபோல-வீணே
கட்டிலில் புரண்டேன் அலைபோல!


எத்தனை மனிதர்கள் வந்தார்கள்-என்
எண்ணத்தில் காட்சித் தந்தார்கள்!
பித்தராய்க் கண்டேன் சிலபேரை-தற்
பெருமையே பேசும் சிலபேரை!
சித்தராய்க் கண்டேன் சிலபேரை-நல்
சிந்தனை ஆளர்கள் சிலபேரை!
புத்தராய்க் கண்டேனே சிலபேரை-எதிலும்
பொறுமை இல்லார் சிலபேரை!


எண்ணம் இப்படி சிதறிவிடும்-என்
இதயம் அதனை உதறிவிடும்
வண்ணம் பலவழி முயன்றாலும்-முடிவில்
வந்தது தோல்வியே என்றாலும்
கண்ணை மூடியே கிடந்தேனே-இரவு
காலத்தை அவ்வண் கடந்தேனே!
உண்மை நிலையிது உரைத்தேனே-அந்த
உணர்வினைக் கவிதையில் இறைத்தேனே!

விடிந்தது இருளும் ஓடிவிட-நெஞ்சில்
விளைந்தநல் அனுபவம் பாடிவிட
முடிந்தது வலையில் ஏற்றிவிட-உங்கள்
முன்னே இன்றும் தவழவிட
வடிந்தது வார்த்தையாம் இப்பாலே-நான்
வணங்கும் தாய்த்தமிழ் கவிப்பாலே!
படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்
படித்திட தந்தேன் அலைவானில்!

புலவர் சா இராமாநுசம்

Monday, February 15, 2016

வறுமையெனும் பேயொன்று இல்லம் தன்னில்- குடியே வந்துவிட்டால் நடப்பதென்ன அந்தோ எண்ணில்

வறுமையெனும் பேயொன்று இல்லம் தன்னில்- குடியே
வந்துவிட்டால் நடப்பதென்ன அந்தோ எண்ணில்
பொறுமையெனும் குணமுற்றும் போகும் அறவே- நாளும்
போடுவது சண்டையென ஆகும் ! உறவே,
வெறுமையென வாழ்வேதான் இன்பம் காணா-தீரா
வேதனைதான் குடும்பமென அமைதி பூணா
( ஆனால்)
திறமைமிகு கணவனொடு மனைவி கலந்து –நல்ல
திட்டமிடின் போகுமே வறுமை குலைந்து

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...