Monday, February 5, 2018

உய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து உய்யும் வழிதனைக் காணுங்கள்





ஐயோப் பாவம் இடைப்பாடி-ஓ,பி.எஸ்
  ஐயா அவரும் உடன்பாடி-அந்தோ
பொய்யாத்  தோன்றும் கானலையே -நம்பி
   போவதும் ஆள்வதும் நிலையிலையே-மேலும்
செய்யாத் தவறுக்கு தண்டணைதான்-ஆதரவு
    செப்பியோர் மாற்றம் கொண்டதுதான-இனியும்
உய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து
  உய்யும் வழிதனைக்  காணுங்கள்

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, February 3, 2018

மறவாது எழுதுவேன்! மரபில் கவிதை –என் மனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே!





மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதைஎன்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றேபலர்
 இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானேஅன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கிடும்  மறுமொழி  தம்மைநீரும்
     வழங்கிட, வளர்ந்திட, வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ண தாமேதிரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கிபின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சில்  தாங்கி,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும்அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன்மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன்முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர்நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றேஎனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர்வாழ்
 நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!

Friday, February 2, 2018

நாள்தோறும் கவிதைதனை நானெழுத முயன்றாலும்


நாள்தோறும் கவிதைதனை
நானெழுத முயன்றாலும்
வாள்போலும் முதுகுவலி
வாட்டிடவே அயின்றாலும்
தோள்கொடுத்து காக்கின்றாள்
தூயத்தமிழ் அன்னையவள்
தாள்தொட்டு தொழுகின்றேன்
தவறாமல் எழுதுகின்றேன்


புலவர் சா இராமாநுசம்

Thursday, February 1, 2018

இதுவரையில் என்கவிதை மரபின் வழியே- நான் எழுதியது அனைத்துமென் அன்னை மொழியே!



இதுவரையில்  என்கவிதை  மரபின் வழியே- நான்
   எழுதியது  அனைத்துமென்  அன்னை  மொழியே
புதுக்கவிதை  எழுதிவிட முயன்று  பார்த்தேன்-ஆனால்
   புரியவில்லை! வரவில்லை! உள்ளம்  வேர்த்தேன்!
எதுக்கவிதை  என்பதல்ல  எனது  நோக்கம் –நானும்
    எழுதிடவே எண்ணினேன் புதிய ஆக்கம்!
அதுவெனக்கு வரவில்லை! தோற்றுப்  போனேன்-ஆனால்
    ஆசைமட்டும் அடங்காத  ஒருவன்   ஆனேன்
   
இன்றில்லை! என்றாலும், வெற்றி பெறுவேன்! –மேலும்
    இயன்றவரை  முயன்றேதான் எழுதித்  தருவேன்
நன்றில்லை எனச்சொல்லி தள்ள மாட்டீர் –என்ற
    நம்பிக்கை  எனக்குண்டே எள்ள மாட்டீர்
கன்றில்லை என்றாலும் பசுவின் பாலை –யாரும்
    கறக்காமல்  விடுவாரா! ? பயணச்  சாலை
ஒன்றில்லை  என்றாலும்  முயலல்  தானே –பணியில்
    ஓய்வுற்ற எனவரையில் அறிவேன்  நானே !
 
புதுக்கவிதை எழுதுவதும்  புதுமை  என்றே –எனக்குப்
    புலப்படவும், புரிந்திடவும் உணர்ந்தேன்  நன்றே
இதுக்கவிதை எனச்சொல்ல எழுத  வேண்டும் –மேலும்
   எழுதிவிட  நாள்தோறும் நம்மைத் தூண்டும்
மதுக்கவிதை! படிப்போரின்  மனதை  மயக்கும் –என்றும்
    மறவாது !நினைத்தாலே  நெஞ்சம்  வியக்கும்
எதுக்கவிதை  என்றிங்கே   ஆய்தல்  வீணே –அதை
    எழுதியதும்  எவரெனவே  ஆய்தல் வீணே!
                 புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...