Friday, October 25, 2013

எங்கேயா அரசாங்கம்? இருக்கு தென்றே –பலர் எண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே!





எங்கேயா அரசாங்கம்?  இருக்கு  தென்றே –பலர்
    எண்ணுகின்ற நிலைதானே நாட்டி  லின்றே!
வெங்காயம் விலைகூட விண்ணை முட்டும்-ஏழை
    வேதனையைச் சொல்லியழ கண்ணீர் சொட்டும்!
தங்காயம் வாடாமல் காரில்  போகும் – கட்சித்
     தலைவர்களே! எண்ணுமிது!  வீணா ! ஆகும்!
பொங்காத மக்களையும் பொங்கச் சொல்லும் –எனில்
     புரிந்துடனே தீர்க்கவழி தன்னை  உள்ளும்!
    
 எருமாட்டின்  மீதுமழைப் பெய்தால்  போல- ஏன்
     இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!
திருநாட்டில் யாராலே இந்தப்  பஞ்சம்-பதுக்கல்
     திருடனுக்கே அரசேதான் கொடுக்கும்  தஞ்சம்!
வருநாளில் எப்பொருளும்  வாங்க  இயலா-ஏழை
     வாடுகின்றான்! தேடுகின்றான் !வழியும் புயால
உருவானால் என்செய்வீர்! போவீர் எங்கே – இதை
     உணராது இருப்பீரேல் நடக்கும்  இங்கே!

அளவின்றி  விலைவாசி  உயர நாளும்- ஆட்சி
    அதிகாரம் சுயநலமே  குறியாய்  ஆளும்
வளமான வாதிகளாய்  வலமே வருவீர்- மக்கள்
     வாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்!
களமாகும் வருகின்ற தேர்தல் காட்டும்-  உடன்
     கைகொடுக்க  ஏற்றதொரு திட்டம் தீட்டும்!
உளமறிய உண்மையிது! உணர்தல்  நன்றே!-ஏதோ
      உரைத்திட்டேன் வேதனையை நானும்  இன்றே!

                            புலவர்  சா இராமாநுசம்
    
    

28 comments :

  1. உண்மைதான் ஐயா... அரசு இயந்திரத்தின் ஆமைவேக செயல்பாட்டினை நினைத்தாலோ... மக்களின் துயரை நினைத்தாலோ... எங்கே சொல்லியழ என்றுதான் தெரியவில்லை. உங்களின் ஆதங்கம் எங்களுடையதும்தான்! அருமை!

    ReplyDelete
  2. கண்ணீர் வருகிறது

    Typed with Panini Keypad

    ReplyDelete
  3. வாராவாரம் எங்கள் பள்ளியில் இருந்து அனைத்து ஆசிரியர்களும் கடம்பத்தூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு (புதன் கிழமை) செல்வதுண்டு...

    அங்கு விவாசாயிகளே நேரடியாக வந்து விற்பனை செய்வதால் காய்கறிகள் மிககுறைந்த விலைக்கு கிடைக்கும்... சில காய்கறிகள் எடையில்லாமல் கூறு கட்டியும் கொடுப்பார்கள்... அதுபோல் வாங்குவது நல்ல ஆதாயமாக இருக்கும்...

    உதாரணத்துக்கு... பீன்ஸ், கேரட், வெண்டை, உருளை போன்ற காய்கறிகள் 10 ரூபாய்க்கு வாங்கினால் போதும் ஒரு வாரத்திற்கு சரியாக இருக்கும்...

    கடந்த இரண்டு வாரமாக தக்காளியும் வெங்காயமும் விலை கேட்ககூட பயமாக இருக்கிறது...

    இந்த வாரம் வெங்காயம் ரூபாய் 60.. இரண்டுகிலோ வாங்கினேன் அதற்கே ரூபாய் 120 ஆகிவிட்டது... வாராவாரம் 200 ரூபாய்க்கே வாரத்துக்கு தேவையாக காய்கறிகறிகள் வந்து விடும்.. இந்தவாரம் பட்ஜெட் அதிகமாகி விட்டது....

    அரசாங்கள் காய்கறிகளின் விலையை சரியாக கண்கானித்து ஒரே நிலையாக வைத்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் கடினம்தான்...

    ReplyDelete
  4. உண்மையை உணர்ந்தால் நல்லது தான்... ஆனால் சந்தேகம் தான் ஐயா...

    ReplyDelete
  5. யோசிக்க வைத்தன, வரிகள்...

    ReplyDelete
  6. வெங்காயம் விலைகேட்டு
    வெந்த மனத்துடன் இப்போதுதான்
    வீடு வந்தேன்
    என் உள்ள வேதனையை உள்ளபடி
    உங்கள் கவிதை உரைப்பதாய் இருக்க
    மனம் மிக மகிழ்ந்தேன்
    துன்பத்திலும் சிறு இன்பம் என
    இதைச் சொல்லலாம்தானே ?

    ReplyDelete
  7. உண்மைதான் அய்யா, பட்ஜெட் போடமுடியல..

    ReplyDelete
  8. மிக்க நன்றி!

    ReplyDelete
  9. கிடைக்கின்றதை சுருட்டுவதற்கு மட்டுமே தங்களது மூளையை
    உபயோகிக்கும் இவர்கள்.. எங்கே மக்கள் நலம் காக்கப்போகிறார்கள்...
    உண்மைதான் ஐயா.. அரசாங்கம் எங்கே இருக்கிறது என்று
    தேடவேண்டிய நிலைமையில் தான் நாம் உள்ளோம்...

    ReplyDelete
  10. உண்மைதான் ஐயா...ஆதங்கம் எங்களுடையதும்தான்! அருமை!

    ReplyDelete
  11. அரசாங்கத்தின் இன்றைய செயல்பாட்டினையும், இயலாமையை மிக அற்புதமான வரிகளால் அழகியத்தூய தமிழ்ச்சொற்களால் கவிதையாக இயற்றி இருக்கிறீர்கள் அப்பா... விலையேற்றத்தைப்பற்றிய கவலை மக்களுக்கு மட்டுமே.. பணத்தில் அதாவது மக்களின் வரிப்பணத்தில்கொழிக்கும் அரசியல்வாதி முதலைகளுக்கு இல்லை இதுபோன்ற கவலைகள். அட்டகாசமான சாட்டையடி வரிகள் அப்பா... சீர்த்திருத்தும் திட்டம் கொண்டு வரும் திண்மை உள்ளவர்களை அரசியலில் காண்பரே அரிது. அன்பு நன்றிகள் அப்பா கவிதை வரிகளுக்கு.

    ReplyDelete
  12. அரசியல்வாதிகளின் சுயநல எண்ணங்களால் தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்து காணப்படுகிறது என்பது அய்யா. தங்கள் பதிவு அரசியல் வாதிகளின் தலையில் ஒரு வீட்டும், அறிவுரை கூறுவது போலவும் உள்ளது சிறப்பு. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா...

    ReplyDelete
  13. மிக்க நன்றி!

    ReplyDelete
  14. உண்மையைச் சொல்லும் கவிதை...
    வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  15. நாட்டு நடப்பை உள்ளது உள்ளபடி சொல்லி நிற்கிறது கவிதை,மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

    ReplyDelete
  16. வெங்காயம் வின்னில் பறக்கிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...