Saturday, October 5, 2013

வேங்கடவன் துதிசூழும்  இடர்தன்னை  சுடர்கண்ட  பனியாக்கும்

     ஏழுமலை  யானே  எனையாளும்  பெருமாளே
வாழும்  நாளெல்லாம்  உனைவணங்கி  நான்வாழ
     பாழும்  மனந்தன்னை  பதப்படுத்த  வேண்டுகிறேன்

அன்னை  அலர்மேலு  அகிலாண்ட  நாயகியே
     பொன்னை  வேண்டியல்ல  பொருளை  வேண்டியல்ல
உன்னை  வணங்குதற்கே  உயிர்வாழ  விரும்புகின்றேன்
     என்னை  ஆட்கொள்வாய்  எனையாளும்  தாயேநீ

பஞ்சுப்  பொதிபோல  பரவி  வருகின்ற
     மஞ்சு  தவழ்ஏழு  மலையானே  கோவிந்தா
தஞ்சம்  நீயென்றே  தலைவணங்கும்  என்போன்றார்
     நெஞ்சில்  நீங்காது  நிலைத்திருக்க  வேண்டுகிறேன்

வாழிவாழி  யென  வானோர்கள்  கூத்தாட
     ஆழிகடைந்  தமுது  அளித்தவனே  மங்கையர்கள்
தாழிகடைந்  தெடுத்த  தயிர்வெண்ணை  திருடியவர்
      தோழி  பலர்துரத்த  தொடர்ந்தோடி  ஒளிந்தவனே

தத்தம்  குறையெல்லாம்  தடையின்றி  நீங்குமென
     நித்தம்  உனைநாடி  நீள்வரிசை  தனில்நின்று
சித்தம்  மகிழ்வுடனே  செப்புகின்ற  கோவிந்தா
     சத்தம்  உன்செவியில்  சங்கொலியாய்  கேட்கிறதா

வெண்ணை  உண்டவாய்  விரிய  வியனுலகு
     தன்னைக்  கண்டதாய்  தடுமாறி  மகிழ்ந்தாட
மண்ணை  அளந்தவனே  மாபலியின்  தலையோடு
     விண்ணை  அளந்தவனே  விமலனே  வணங்குகிறேன்

மலையில்  வாழ்பவனே  மலையை  நீதூக்கி
     தலையின்  மேல்வைத்தே  ஆவினத்தை  காத்தவனே
அலையில்  கடல்மீது  ஆனந்தப்  பள்ளியென
     இலையில்  துயின்றவனே  இறைவாநான்  தொழுகின்றேன்

ஆதிமூல  மென்ற  அபயக்குரல்  வந்துன்
     காதில்  விழச்சென்று  காத்தவனே  கோவிந்தா
வீதிதனில்  வருவாய்  வீழ்ந்து  வணங்கிடுவார்
     தீதுதனை  முற்றும்  தீர்த்திடுவாய்  கோவிந்தா

எங்கும்  உன்நாமம்  எதிலும்  உன் நாமம்
     பொங்கும்  உணர்வெல்லாம்  போற்றும்  திருநாமம்
தங்கும்  மனதினிலே  தடையின்றி  உன்நாமம்
     பங்கம்  அடையாமல்  பாஞ்சாலி  காத்ததன்றோ

அம்மை  அலர்மேலு  அப்பன்  திருமலையான்
     தம்மை  நாள்தோறும்  தவறாமல்  வணங்கிவரின்
இம்மை  மறுமையென  எழுபிறவி  எடுத்தாலும்
     உம்மை  மறந்தென்றும்  உயிர்வாழ  இயலாதே

 பாடி  முடித்திவிட  பரந்தாமா  உன்அருளை
     நாடி  வருகின்றேன்  நாயகனே  வேங்கடவ
 தேடி  வருவார்கு  திருமலையில்  உனைக்காண
     கோடிக்  கண்வேண்டும்  கொடுப்பாயா  பரந்தாமா

 முற்றும்  உன்புகழை  முறையாக  நான்பாட
     கற்றும்  பல்லாண்டு  காணாது  தவிக்கின்றேன்
 பற்றும்  அற்றவரும்  படைக்கின்ற  பிரம்மாவும்
     சற்றும்  அறியாருன்  திருவடியும்  திருமுடியும்

 வேதத்தின்  வித்தேயுன்  விளையாட்டை  யாரறிவார்
     நாதத்தின்  சத்தேயுன்  நாடகத்தை  யாரறிவார்
 பேதத்தை  கொண்டவுள்ளம்  பெருமாளே  என்போன்றார்
     சோகத்தை  நீக்குமென  சொல்லியிதை  முடிக்கின்றேன்

  தாங்கும்  நிலையில்லா  தடைபலவே  வந்தாலும்
      நீங்கும்  படிசெய்யும்  நிமலனே  நாள்தோறும்
  தூங்கும்  முன்வணங்கி  தூங்கி  எழவணங்கும்
      வேங்கி  தாசன்நான்  விடுக்கின்ற  விண்ணப்பம் 

  செல்லும்  திசைமாறி  சென்றுவிடும்  கப்பலென
      அல்லும்  பகலுமென்  அலைகின்ற  உள்ளத்தை
  கொல்லும்  அரவின்மேல்  கொலுவிருக்கும்  கோவிந்தா
      ஒல்லும்  வழியெல்லாம்  உனைவணங்கச்  செய்திடுவாய்!
 
    ( விண்ணில்  வாழும், என் துணைவியின் விருப்பதிற்கேற்ப
மண்ணில்  வாழும் நான்  அன்று பாடியது! இன்று, புரட்டாசி மூன்றாம்  சனி! அவள் , காண ....... மீண்டும் வருகிறது!  காண்பாளா......!?   )                             புலவர் சா இராமாநுசம்

15 comments :

 1. செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென அல்லும் பகலுமென் அலைகின்ற உங்கள் உள்ளத்தை வேங்கடவன் ஆற்றுப்படுத்த வேண்டுகிறேன்!

  ReplyDelete
 2. பொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல
  உன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்
  என்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ.

  எத்தனை முறை படித்தாலும் தங்கள் துணைவியாரின் முகம் தான் நினைவுக்கு வருகிறது. நெகிழச்செய்த வரிகள் ஐயா.

  ReplyDelete
 3. இன்று, புரட்டாசி மூன்றாம் சனி! அவள் , காண ....... மீண்டும் வருகிறது! காண்பாளா..//ஆம்.மனம்மகிழ்ந்து இருப்பார்கள் மறுபடியும் உங்களுக்கு மனைவியாகப் பிறப்பார்கள்

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா

  மலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி
  தலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே
  அலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென
  இலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்

  வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. அனைத்து வரிகளுகே அருமை ஐயா...

  ReplyDelete
 6. ஐயா.. அத்தனையும் அழகிய வரிகள்! உங்கள் கவிதையிலே உள்ள எளியநடை மிக மிக அருமை ஐயா!
  அற்புதமான வரிகள் அனைத்தும்!


  //செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
  அல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
  கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
  ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்!//

  என் வேண்டுதலும் இதுதான் ஐயா!

  பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 7. உங்கள் துணைவியார் உங்கள் இதயத்திலேயே இருப்பதால் நிச்சயம் இதைக் காண்பார்.

  ReplyDelete
 8. அற்புதமான கவிதை
  மீண்டும் மீண்டும் படித்துச் சொல் நயத்திலும்
  பொருட்சுவையிலும் மிக்க மகிழ்வு கொண்டேன்
  சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 9. ஈங்குநான் இன்றேதான் இன்கவி கண்ணுற்றேன்
  வேங்கடவன் துதிகண்டு வியர்க்கிறது விழியிரண்டும்
  பாங்குடனே பகன்றவிதம் பரிபூரண மானதையா
  ஏங்கும் மனமிறக்கி என்றும் மகிழ்ந்திடுவீர்...!


  அழகிய கவிதை இயல்பான சொற்கள்
  அத்தனையும் அருமை

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 10. நெஞ்சை நெகிழச் செய்யும் வரிகள் ஐயா.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...