Saturday, January 17, 2015

திருக்குறள் திருநாள் கவிதை!


தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்

சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

9 comments :

  1. கவிதை உணர்ச்சிகரமாக இருந்தது ஐயா.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. வணக்கம்
    இரசித்தேன் ஐயா... கவிதை அருமையாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிறப்பிற்கு சிறப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

  4. ஐயா வணக்கம்!

    22.01.2015 இந்தியா வருகின்றேன்! வந்ததும் உங்களுடன் தொடா்புகொள்கிறேன். உங்களைச் சந்திக்க வேண்டும்.

    தொலைபேசியில் தொடா்பு கொள்கிறேன்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...