Tuesday, October 13, 2015

நல்முறையில் புதுக்கோட்டை சென்று வந்தேன்-நிகழ்வு நடந்த முறை அனத்துமே இனிக்கும் செந்தேன்!





நல்முறையில்  புதுக்கோட்டை  சென்று  வந்தேன்-நிகழ்வு
     நடந்த  முறை  அனத்துமே  இனிக்கும்   செந்தேன்!
வல்லமையே கொண்டவராம் இளையோர்  அணியே-நேரில்
      வந்தவர்கள் அறிவார்கள்  அவர்தம்   பணியே!
சொல்லரியப்  புகழ்பெற்றார் முத்து   நிலவன்-சற்றும்
     சுயநலமே ஏதுமில்லா, உழைத்த   தலைவன்!
இல்லைநிகர் இல்லையென வந்தோர்   தம்மை- தூய
     இதயமுடன் வரவேற்றார் வணங்கி  எம்மை!

நாவிற்கு, இனியசுவை நல்கும்  விருந்தே-பலரும்
      நவின்றிட்ட  சொற்பொழிவும்   நல்ல மருந்தே!
காவிற்கு அழகூட்டும்  மலர்கள்  போன்றே –மிகவும்
     கனிவுடனே பணிசெய்த  தொண்டர்  சான்றே!
பாவிற்குள் அடங்காத  பெருமை  ஆகும்- முற்றும்
      பகர்ந்திடவே! இயலாத  அருமை  ஆகும்!
நோவிற்கு ஆளாகி  இருந்த  போதும் – வருகின்ற
      நோக்கம்தான் குறியாக  மனதில்  மோதும்!

அகம்கண்டு  முகம்காணா  பலரைக்  கண்டேன்-மேலும்
        அவரோடு  உரையாடி மகிழ்வே  கொண்டேன்!
இகம்தன்னில்  பிறந்ததிட்ட  பயனைப்  பெற்றேன்-நாளும்
         இணையத்தால்  இத்தைய  உறவை உற்றேன்!
நகத்தோடு இணைந்திட்ட  சதைபோல்  இன்றே-புதுகை
     நடத்திட்ட பதிவர்விழா  குறையில்  ஒன்றே!
சுகத்தோடு   அனைவருமே  இல்லம்  சென்றார்-பன்முறை
     சொல்கின்றேன்   வணக்கமென  நன்றி !  நன்றி!

புலவர்  சா  இராமாநுசம்

33 comments :

  1. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கவிதையைப் போலவே ஆச்சரியப்பட வைத்தது. நல்ல உறுதி உள்ளம் கொண்ட உங்களுக்கு என் வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி! நண்பரே! நேரில் கண்டும் உரையாட இயலாது போயிற்று! மன்னிக்க

      Delete
  2. ஆம்! ஐயா அருமையான விழாவாக இருந்தது என்றால் அது மிகை அல்ல!!! தாங்கள் தங்களது உடல் நல இயலாமையிலும் அங்கு வந்து கலந்து கொண்டமை எங்களுக்கு எல்லாம் ஓர் உதாரணம்! முன்னோடி எனலாம் ஐயா! வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  3. இனிய அனுபவத்தைப் பெற்று வந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வராதது ஏமாற்றமே!

      Delete
  4. உடல் நலமின்மையை பொருட்படுத்தாது
    இவ்வளவு தூரம் தாங்கள் வந்திருந்து
    சிறப்பித்ததே விழாவிற்கான சிறப்புகளில் ஒன்று
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. உங்களை சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி அய்யா :)

    ReplyDelete
  6. தமிழுக்கு ஏது சொத்து
    அந்த தமிழுக்கு (என் பார்வையில்)
    தாங்களே வித்து.

    இணைய உலகில் தங்கள் வயதில் பாதியும் எட்டாத
    பொடியோனென் பங்களிப்பை எடை நோக்கினேன்
    தாங்கள் எம் போன்றோருக்கு நிழலுடன் கனிதரும்
    மா 'மரம்'.

    அக்கூ(ட்)டத்தில் தங்களை தரிசித்து
    களித்து பின் தங்களை நெருங்கி வர யோசித்து
    பின் (தங்களின் உடல் நலம் மற்றும் விழாவில் தங்களை தொல்லை படுத்த விரும்பாத காரணத்தால் அருகில் வராத என் அறியா மெய்யை மன்னிக்க...)

    என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விழாக்குழுவினர் தந்த வாய்ப்பை சுருக்கமாக பகிர முற்பட்டு திரும்புகையில் என்னை அடையாளம் கண்டு அ(ணை)ழை)த்தது கண்டு மனமகிழ்ந்து நெகிழ்ந்து உளமாற சொல்கிறேன்...பதிவர்களுக்கு என்றென்றும் தாங்களே கலங்கரை விளக்கம். வாழ்க நீவிர் இன்னும் பல்லாண்டு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி!

      Delete
  7. வணக்கம் ஐயா உடல் நிலையை பொருட்படுத்தாது தாங்கள் இவ்வளவு தூரம் பயணித்து கலந்து வந்தது தங்களின் வெண் மனதை வெளிப்படுத்தியது கவிதை நன்று.
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி ஐயா!

    ReplyDelete
  9. விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி - உங்களுக்கு.... கவிதை படித்த மகிழ்ச்சி எங்களுக்கு!

    ReplyDelete
  10. உங்களை நேரில் கண்டதில் மகிழ்ச்சி எங்களுக்கு. நன்றி.

    ReplyDelete
  11. 'உடலுக்குத்தானே நோய், உள்ளத்திற்கு அல்லவே?' என்று உங்கள் வருகை உணர்த்தியது. உரியமுறையில் உங்களைக் கௌரவித்ததன் மூலம் விழாவின் கண்ணியம் உயர்ந்தது என்றால் மிகையில்லை. - இராய செல்லப்பா

    ReplyDelete
  12. அய்யா, புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பினில், உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  13. உங்களை நேரில் கண்டது மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  14. வணக்கம் அய்யா .நீங்கள் இங்கு வந்து விழாவில் கலந்து கொண்டது நாங்கள் பெற்ற பெரும் பேறு....இளையோர்களை பாராட்டும் உங்களின் பெருந்தன்மை எங்களுக்கு மேலும் வழிகாட்டும்....மிக்க நன்றி அய்யா..

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா

    அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் தங்களுக்கு பரிசு வழங்கி மரியாதை செய்த காட்சியை நேரலையில் பார்த்து மகிழ்ந்தேன் ஐயா... வாழ்த்துக்கள் த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. உங்களை சந்தித்ததிலும் சந்திப்பை உறுதி செய்யும் முகமாக என்னைத் தொலைபேசியில் அழைத்ததையும் நினைத்து மகிழ்கிறேன் வணக்கம் பல்

    ReplyDelete
  17. மகிழ்வோடு நன்றி அய்யா!

    ReplyDelete
  18. எங்கள் விழாக்குழுவின் இருபெரும் உழைப்பாளிகள் மு.கீதா, இரா.ஜெயலட்சுமி இருவரும் சொன்னதையே நானும் சொல்கிறேன். தாங்கள் வந்தது விழாவிற்கே பெருமை சேர்த்தது. தங்களை கௌரவிக்க வேண்டும் என்று விழாக்குழு முடிவெடுத்ததைக் கூடத் தங்களிடம் சொல்லாமலே வைத்திருந்தோம். வந்து எங்கள் மரியாதையை ஏற்றுக்கொண்டு, கவிதையால் பாராட்டியதற்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  19. தமிழ் ஆசிரியர்கள், புலவர்கள் இவ்வளவு பேர் வலைப்பூ வைத்திருப்பார்கள் என நான் நினைத்து கூட பார்த்ததில்லை. தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சியறிந்து கணினியைக் கையாளும் தங்களைப் போன்றோரின் ஆர்வம், சதா கணினியை சுற்றி மட்டுமே திரியும் என்னைப் போன்றோரை தமிழிலக்கிய கனிகளை நோக்கி ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  20. அய்யா வணக்கம். தங்கள் நலமறிய விழைகிறேன்.
    புதுக்கோட்டையில் பதிவர் விழா நடந்து ஆண்டு ஒன்று கடந்துவிட்டது. அடுத்த விழா எங்கே எங்கே என்று அனைவரும் கேட்கின்றனர். தாங்கள் முன்முயற்சி எடுத்து ஒரு கூட்டத்தைக் கூட்டினால், எந்த இடத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று பேசலாம். செய்ய வேண்டுகிறேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...