Wednesday, January 31, 2018

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை



முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 

ஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்
ஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்
காயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்
காணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே
சாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ
சாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட
வாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது
வரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே

கொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக காட்டில்-ஈழ
குடும்பங்கள் வீழ்வதனை கண்டு ஏட்டில்
முத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ
மூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே
செத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு
சேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி
எத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது
எதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ

வீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்
வீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே
தீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு
திசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்
நேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்
நினைத்தபடி தனிஈழப் பரணி பாடி
கூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்
குமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே

இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்
எழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே
அரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்
அனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி
உறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்
உருகியழ வெள்ளமென கண்ணீர் பொங்கும்
தருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய
தருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்

அழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்கள்

ஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி       
கழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில
கயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்
விழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்
விளைவாக அணிதிரள விரைந்தே வருவார்
செழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்
சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்

புலவர் சா இராமாநுசம்      


3 comments :

  1. வேதனையான கவிமழை ஐயா.

    ReplyDelete
  2. படிக்கப் படிகக மனம் கணக்கிறது ஐயா

    ReplyDelete
  3. முத்துகுமார் அவர்களின் இழப்பு
    ஈடு செய்ய முடியாத ஒன்று

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...