Showing posts with label கூடங்குளம் போராட்டம் கவிதை மீள் பதிவு. Show all posts
Showing posts with label கூடங்குளம் போராட்டம் கவிதை மீள் பதிவு. Show all posts

Thursday, September 13, 2012

தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர் துச்சமா எண்ணிடல் எளிதல்ல

              ஓர் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட கவிதை
    இன்றைய சூழ்நிலைக கருதி வெளியிடப் படும்
                                மீள் பதிவு
        


மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!

                            புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...