ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?
பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!
மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!
புலவர் சா இராமாநுசம்