Showing posts with label விலையேற்றம் விலைவாசி மேலும். Show all posts
Showing posts with label விலையேற்றம் விலைவாசி மேலும். Show all posts

Tuesday, January 12, 2016

ஆறுதலை சொல்வற்கு யாரும் காணோம் அஞ்சியஞ்சி வாழ்வதற்கு நாமும் நாணோம்!



கைநிறை  காசெடுத்துப்  போனால்  கூட
 காய்கறிகள் விலையந்தோ அதிகம்  ஓட
பைநிறைய  வில்லையெனில்  வாழ்தல் எங்கே
பல்பொருளும் இவ்வாறே  நாளும்  இங்கே

மத்தியிலே  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
மாநிலத்தை  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
புத்தியிலே  நமக்குத்தான்  என்றே  நொந்தே
புலம்புவதா மக்கள்தான்  உள்ளம்  வெந்தே

ஏறுமுகம் எப்பொருளும் நஞ்சைப் போன்றே
இனியென்றும் மாறாது  என்றே   தோன்ற
ஆறுதலை  சொல்வற்கு  யாரும் காணோம்
அஞ்சியஞ்சி  வாழ்வதற்கு  நாமும்  நாணோம்

புலவர்  சா  இராமாநுசம்


Sunday, February 17, 2013

பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!



ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...