Showing posts with label தமிழர் புத்தாண்டு பொங்கல் தமிழர் திருநாள் வாழ்துப்பா. Show all posts
Showing posts with label தமிழர் புத்தாண்டு பொங்கல் தமிழர் திருநாள் வாழ்துப்பா. Show all posts

Friday, January 15, 2016

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை! தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்!


தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
மேதினி உணர்ந்திட இங்கே விண்டோம்


காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
விளைந்திட அறுவடைப் பொங்க லிட்டான்
மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
மனித நேயத்துக்கே வித்தி டுவான்
பாட்டுக்கே அன்னவன் உரிய வனாம்-தமிழ்ப்
பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!

உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
கைகள் முடங்கிடின் எதுவு மின்றே
மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
இயலாது! இயலாது !கண்டோ மன்றே-அந்த
ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
பயிலாதப் பெரும்பான்மை மக்க ளய்யா-உடன்
பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

புலவர் சா இராமாநுசம்

 வணக்கம் ! அனைவருக்கும்  இனிய  பொங்கல் வாழ்துகள்!

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...