Tuesday, March 25, 2014

முகநூலில் என் அகம் பதித்தவை!





உறவுகளே வணக்கம்!

பூக்கின்ற எல்லாப் பூக்களும் பிஞ்சாவதில்லை! எல்லா பிஞ்சுகளும் காயாவதில்லை! எல்லாக் காய்களும் கனியாவதில்லை! எனவே, வாழ்கையில், நாம் எண்ணும் எண்ணங்களும், செய்ய முற்படும் செயல்களும் பலபலவே
ஆனாலும், சிலசிலவே வெற்றி பெறும் ,என்பதை உணர வேண்டும்! அதுதான் அமைதியான வாழ்கைக்கு வழி கோலும்

நெருஞ்சி முள் நிறைந்த இடத்தில் வெறும் காலை வைத்தால் பாதம் முழுவதும் முள் குத்திக் கொள்ளும்! ஐயோ என்று காலை மாற்றி மாற்றி வைத்தாலும் அதே நிலைதான்! அது தீரவேண்டுமென்றால் ,முள்ளற்ற இடம் நோக்கிப் போக வேண்டும்! அதுபோல, சில சூழ்நிலைகளில் , சில நிகழ்ச்சிகள்
நம், மனதில் முள்ளாகக் உறுத்திக் கொண்டே இருக்கின்றன
என்றால் ,அதைவிட்டு விலகி வேறு வகையில் எண்ணங்களை
திருப்புவதே புத்திசாலித்தனமாகும்!


ஒருநாள்தான் வாழ்வு , என்றாலும் மலர்கள் பூக்கத்தானே செய்கின்றன! அதுவும், தனக்கே உரிய அழகும், நிறமும் மாறாமல்,மனதை மயக்கும் மணத்தை வீசி, காலா காலமாக, இயற்கையோடு இணைந்து நடப்பதை கண்டும், இந்த மனிதப் பிறவிகள் மட்டும் இயற்கைக்கு மாறாக,ஏன், எதிரியாக நடந்து
கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்!
புரியவில்லையே! பகுத்தறிவு , என்று, ஒன்று இருப்பதுதான் காரணமோ!!!?

அழகானவை!

குற்றமில்லாமல் திருத்தமா பேசுதலே கல்வி கற்றவர்களுக்கு அழகாகும்!
செல்வம் உடையவர்கள் , தம் நெருங்கிய சுற்றத்தாருக்கு உதவி
செய்தலே அழகாகும்!
வேதம் ஓதுகின்ற வேதியர்களுக்கு ஒழுக்கமே அழகாகும்!
நீதி, தவறாமல் ஆட்சி செய்வதே அரசனுக்கு அழகாகும்!
வாணிகம் செய்வார்க்கு மேலும், மேலும் வருமானத்தைப்
பெருக்குவதே அழகாகும்!
உழவர், உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே அழகாகும்!
(வெற்றிவேற்கை)


உலக நீதி! குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டியவை!

படிக்காமல் ஒருநாளும் இருக்காதே!
பிறர் மனம் வருந்தும்படி எதையும் சொல்லாதே!
பெற்ற தாயை என்றும் மறவாதே!
வஞ்சனையாய் தீமை செய்வாரோடு சேராதே!
போகத் தகாத இடங்களுக்குப் போகாதே!
ஒருவர் நம்மை விட்டுப் போனபின்பஅவரைப்பற்றி
இழிவாகப் பேசாதே!
(தெடரும்)


பொதுவாக ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்றாலும், வாய் ,அதாவது நாக்கு ,அதைமட்டுமாவது
அடக்கியே வாழ வேண்டும்! வள்ளுவர் இதனைப்பற்றி தனியாகவே கூறுகிறார் ! நம்முடைய வாய் பேசுவதற்கும் ,உண்ணும் உணவின் சுவையை அறிவதற்கும் துணையாக இருப்பதே நாக்குதான்! ஒருவன் , புலன்களில் எதனை அடக்க
முடியாவிட்டாலும் நாக்கை மட்டுமாவது கட்டுப் படுத்தாமல் விட்டால் , மற்றவர்களின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகி சோகத்தையே முடிவாக பெறுவார்கள்

தகாத சொற்களைப் பேசுவதால் வருவது தண்டணைதான்
என்ற நேர் பொருளோடு ,குறிப்புப் பொருளாக, சுவை அறிய உதவும் நாக்கால் தகாத(உடல் நலத்திற்கு) உணவுகளை உண்ணுவதும் கேடுதான் என்பதையும், நயமாக உணர்த்துவது
இன்புறத் தக்கது!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு -குறள்

     

      புலவர்  சா  இராமாநுசம்


   

Monday, March 24, 2014

வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!



வானத்தை  முட்டுவதா  விலைவாசி யிங்கே – வாங்க
   வழியில்லா மக்கள்தான் பரதேசி  யிங்கே!
ஏனென்று  கேட்காத  ஊடகங்க ளிங்கே - ஏதும்
   எல்லையின்றி  நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானின்று நடக்கின்ற  நாடுமது மிங்கே- மக்கள்
   தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவதும் தேளாகும்!  இங்கே –நாளும்
   திகைப்போடு கேட்கின்றார்  அரசுதான் எங்கே?
 
 
கால்கிலோ  காய்கூட  வாங்கிடவே இயலா –ஏழைக்
   கண்ணீரைத்   துடைத்திட யாருமே முயலா!
நாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு  காணா-சாகா
   நடைப்பிணமே! அவன்வாழ்வு! கண்டுமதை  நாணா!
ஆள்வோரே! கண்மூடி துயிலொன்று கொண்டால்? –ஆள
   ஆதரவு  தந்தார்க்கு  செய்கின்ற   தொண்டா?
மாள்வாரா  மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்
   மட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்!
 
 
நஞ்சாக ஏறிவிட  நாள்தோறும் அந்தோ –தெரு
  நாய்போல அலைகின்றார் உள்ளமதும்  நொந்தே!
பிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்
   பேசியே திரிகின்ற  பித்தனாய்ப் போனார்!
பஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்
    பாராளும் தேர்தலில்  மறந்துடு  வாரோ?
அஞ்சாது நடக்காதீர்!  ஆள்வோரே ஈண்டும் –உடன்
    ஆவனவும்  செய்தால்தான் வருவீராம்  மீண்டும்!
                                புலவர்  சா  இராமாநுசம்
உரிய நேரம் கருதி  மீள்பதிவு!

Saturday, March 22, 2014

அரசியல் நமக்கு அவசியமே!(அருணாவின் விருப்பம் ! நிறைவேற, பாடிய பாடல்)



அரசியல் நமக்கு  அவசியமே !-நல்லோர்
    ஆட்சிக்கு  வருவதும் அவசியமே!
பரம்பரை நீங்குதல் அவசியமே! –பதவி
    பண்புளார்  தாங்குதல்  அவசியமே!

மன்னர் ஆட்சி முடிந்தாலும் –நல்
    மக்கள் ஆட்சி  மலர்ந்தாலும்
என்ன பலன்தான் கண்டோமே –இன்னும்
   ஏழைகள் அதிகமாய்  கொண்டோமே!

பாலும் தேனும் தெருவெங்கும் –விரைந்து
   பாய நாட்டில் வளமோங்கும்!
நாளும் சொல்லியே நம்பவைத்தார் –ஆனால்
   நாடாளச் சென்றவர் வெம்பவைத்தார்!
வீதிக்கு  நடுவில்  மதுக்கடையே –பெண்கள்
    வீதியில்  நடப்பர்  பயத்திடையே!
நீதிக்கும் நேர்மைக்கும்   இடமில்லை! –கொள்ளை
    நிகழா நாளோ  ஏதுமில்லை!

குற்றம்  ஆள்வோர் மட்டுமல்ல –இலஞ்சம்
    கொடுக்கா மனிதர்  யார்சொல்ல
உற்றே நோக்கின்  நம்மைநாம் –நன்கு
    உள்ளம் காட்டும் உண்மைதனை

      புலவர்  சா  இராமாநுசம்
   

Friday, March 21, 2014

என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


     சின்னப் பையன் வருவானே-தினம்
           செய்தித் தாளும் தருவானே!
     சன்னல் வழியும் எறிவானே –கதவுச்
           சாத்திட குரலும் தருவானே!
     இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
           இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
     என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
           இறைவனை எண்ணி நிந்தித்தேன்!

    பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
           பாடம் படிக்கும் வயதன்றோ!
    துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
           துரத்த ஓடும் வயதன்றோ!
     அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
           அறுத்த செருப்புக் காலோடும்!
    தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
           தவறின் திட்டும் பெறுவானே!

     சட்டம்  போட்டும் பயன்தருமா-கல்வி,
           சமச்சீர் ஆகும் நிலைவருமா!
     இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
           ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
     திட்டம் மட்டுமே போடுகின்றார்-தம்
           தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
     கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
           கொடிகட்டிப்  பறக்குது! நாதியிலே!

     இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
           இருந்திட வேண்டும் ஒரேமுறை!
     நம்மைஆள தேர்தல்முறை-இன்று
           நடைமுறைப் படுத்தும் அந்தமுறை!
     அமைய குரலும் விடுப்பீரே-கல்வி
           ஆணையம் அமைத்து கொடுப்பீரே!
     சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
           சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்!

             புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 19, 2014

கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!



கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி
கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!
ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
ஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!
ஆட்டமே களைகட்டும்! பாருமிங்கே- நடக்கும்
அரசியல் வேடிக்கை! ஊதசங்கே!
நாட்டையே மேன்மேலும் நாசமாக்கும் –நாளும்
நஞ்சென விலைவாசி மோசமாக்கும்!

வாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே –மக்கள்
வளமுற வாழ்கின்ற நாளுமென்றே!
நாணிடும் உள்ளமே காணவில்லை –ஏனோ
நல்லவர் அக்கரைப் பூணவில்லை!
தேன்தேடி மலரெங்கும் திரியும்வண்டே-பதவித்
தேன்தேடும் பித்தராம் ! திரியக்கண்டே!
ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
எழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!

புலவர் சா இராமாநுசம்

Monday, March 17, 2014

தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால் தோன்ற வேண்டும் அதில்மாற்றம் !



தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானென பண்ணாதீர்
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப
போக வந்திடும் முன்னேற்றம்

எண்ணிச் செயலபடின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும ஏமாற்றம்
மண்ணில எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...