Showing posts with label சமூகம் அவலம் குழந்தைகள். Show all posts
Showing posts with label சமூகம் அவலம் குழந்தைகள். Show all posts

Friday, March 21, 2014

என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


     சின்னப் பையன் வருவானே-தினம்
           செய்தித் தாளும் தருவானே!
     சன்னல் வழியும் எறிவானே –கதவுச்
           சாத்திட குரலும் தருவானே!
     இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
           இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
     என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
           இறைவனை எண்ணி நிந்தித்தேன்!

    பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
           பாடம் படிக்கும் வயதன்றோ!
    துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
           துரத்த ஓடும் வயதன்றோ!
     அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
           அறுத்த செருப்புக் காலோடும்!
    தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
           தவறின் திட்டும் பெறுவானே!

     சட்டம்  போட்டும் பயன்தருமா-கல்வி,
           சமச்சீர் ஆகும் நிலைவருமா!
     இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
           ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
     திட்டம் மட்டுமே போடுகின்றார்-தம்
           தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
     கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
           கொடிகட்டிப்  பறக்குது! நாதியிலே!

     இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
           இருந்திட வேண்டும் ஒரேமுறை!
     நம்மைஆள தேர்தல்முறை-இன்று
           நடைமுறைப் படுத்தும் அந்தமுறை!
     அமைய குரலும் விடுப்பீரே-கல்வி
           ஆணையம் அமைத்து கொடுப்பீரே!
     சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
           சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்!

             புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...