Friday, March 10, 2017

சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா!



சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா-ஒன்று
சேரவழி ஏதுமில்லை அண்ணாதிமுகா
உதிறிபூவாய் போனதய்யா அண்ணாதிமுகா-பானை
உடைந்தஓடாய் கிடக்குதய்யா அண்ணாதிமுகா
பதிரேநெல்லில் கலந்ததுபோல் அண்ணாதிமுகா-காற்றில்
பறக்கும்நிலை கண்டதய்யா அண்ணாதிமுகா
எதிரியின்றி அழிவதுதான் அண்ணாதிமுகா-மீண்டு
எழுவதற்று வாய்ப்பில்லா அண்ணாதிமுகா!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 8, 2017

மகளிர் தின கவிதை!



ஏட்டளவில் சமஉரிமை மகளிர்க் கென்றே-சொல்லி
ஏழாண்டாய் ஏமாற்றி வருதல் ஒன்றே
நாட்டளவில் காணுகின்ற அவலம் இன்றே-நம்முடை
நாடாளும் மன்றத்தில் நடக்க நன்றே
வீட்டளவில் கூடசம உரிமை இல்லை-எனில்
வீணாக மகளிர்தினம் !எதற்குத் தொல்லை
பாட்டளவில் சொல்லுவதா துயரின் எல்லை-உலகில்
பாவையராய் பிறந்தாலே பல்வகைத் தொல்லை!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 1, 2017

பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்!


பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும்
புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும்
பதவிபட்டம் பணமென்றே கொள்கை நாட்டமே
உழுதுயிட்ட பயிரெல்லாம் சாவி ஆகவே-கண்ட
உழவனவன் வழியின்றி ஆவி போகவே
விழுதுவிட்டே வளர்கிறது ஊழல் மரமே-மக்கள்
வேதனையே படுவதுவா இறைவன் வரமே


புலவர் சா இராமாநுசம்

Tuesday, February 28, 2017

பழைய பாடல்! இன்றும் பொருந்தும் !

பழைய பாடல்! இன்றும் பொருந்தும்
-------------------------------------------------------
வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க
வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!
ஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்
எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானின்று நடக்கின்ற நாடுமது மிங்கே- மக்கள்
தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவது தேளாகும்! இங்கே –நாளும்
திகைப்போடு கேட்கின்றார் அரசுதான் எங்கே?


கால்கிலோ காய்கூட வாங்கிடவே இயலா –ஏழைக்
கண்ணீரைத் துடைத்திட யாருமே முயலா!
நாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு காணா-சாகா
நடைப்பிணமே! அவன்வாழ்வு! கண்டுமதை நாணா!
ஆள்வோரே! கண்மூடி துயிலொன்று கொண்டால்? –ஆள
ஆதரவு தந்தார்க்கு செய்கின்ற தொண்டா?
மாள்வாரா மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்
மட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்!

நஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு
நாய்போல அலைகின்றார் உள்ளமதும் நொந்தே!
பிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்
பேசியே திரிகின்ற பித்தனாய்ப் போனார்!
பஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்
பழையபடி தேர்தலில் மறந்துடு வாரோ?
அஞ்சாது நடக்காதீர்! ஆள்வோரே ஈண்டும் –உடன்
ஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, February 24, 2017

ஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்



வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து
வருமுன்னர் காத்திட ஆள்வோர் நெஞ்சம்
தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே
தடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை
கருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்
கருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே!
உருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்
உணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 22, 2017

கவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்



இன்றென் மனைவி பிறந்தநாளே-நெஞ்சில்
என்றும் மறவா சிறந்தநாளே
கன்றுமுட்ட சுரக்கும் பாலென-வாழ்ந்த
காலம் முழுவதும் சேயென
நன்றென என்னைக் காத்தவளே-என்னை
நடைப் பிணமாக்கி நீத்தனளே
சென்றன எட்டே ஆண்டுகளே –நாளும்
செயல்பட அவளதரும் தூண்டுதலே


புலவர் சா இராமாநுசம்

அப்பப்பா தமிழகமே தாங்காதய்யா-ஆள்வோர்
அலங்கோலம்! அவலமிது !நீங்காதய்யா
தப்பப்பா நடப்பதெல்லாம் ஆயினின்று-தமிழன்
தலைகுனிய வைத்தனரே இதுவாநன்று!
செப்பப்பா ஏதுவழி செம்மையுறவே-நல்லோர்
சிந்தையெலாம் துயர்தன்னில் வெம்மையுறவே
எப்பப்பா முடிவிதற்கு விரைந்து காண்பீர்-பொறுப்பு
ஏற்றவரே! ஆளுநரே வாரும் மாண்பீர்


புலவர் சா இராமாநுசம்

என்னமோ நடக்குது
ஏதேதோ நடக்குது நடராசா-தில்லை
நடராசா
முன்னபின்ன தெரியல
முழுமையா புரியல நடராசா-தில்லை
நடராசா
மின்னலென மறையுது
மேகமென விரையுது- நடராசா-தில்லை
நடராசா
இன்னலிது தந்துவிட
இதயமது நொந்துவிட-நடராசா-தில்லை
நடராசா


புலவர் சா இராமாநுசம்

Tuesday, February 21, 2017

முகநூலும் மூன்று கவிதைகளும்!

இலவுகாத்த கிளியானாய் மினியம்மா-உண்ண
இறைவன்தந்த வரம்தானே களியம்மா
உலவிடுவேன் சிங்கமென மினியம்மா-நீங்க
உரைத்தபின்னர் பற்றியது சனியம்மா
நிலவுபோல தேய்பிறையாய் மினியம்மா-கனவு
நீங்கியது விடாதினி சனியம்மா
பலவேசெய்தும் பயனில்லை மினியம்மா-வந்த
பாதையிலே பழுதுமிக சனியம்மா


புலவர் சா இராமாநுசம்


ஆளுனரே! ஆளுனரே எங்கே போறிங்க!-நீங்க
ஆளவந்த பின்நடக்கும் கூத்து பாருங்க
நளுமிங்கே நடப்பதெல்லாம் வெக்க கேடுங்க-இனியும்
நம்புதற்கு ஏதுமில்லை! முடிவு தேடுங்க!
மாளுவாங்க போருமிட்டு ! அமைதி போகுங்க-இங்கே
மக்களுக்கு வாழ்கையே துன்ப மாகுங்க!
ஆளுனரே! ஆளுனரே ஆய்ந்து பாருங்க-உண்மை
அறிந்த பின்னர் விடிவு கூறுங்க!


புலவர் சா இராமாநுசம்

எதையும் சொல்லிப் பயனில்லை
யாரையும் நொந்தும் பயனில்லை
கதையிலும் காணாத் திருப்பங்கள்
கண்டிட மக்கள் விருப்பங்கள்
புகையும் எரிமலை போன்றதுவே
பொங்கிடக் காண்பீர் தோன்றதுவே
பகையும் தீர்ப்பர் ஒருநாளே
பாரீர் விரைவிலத் திருநாளே


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...