வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!
நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!
புலவர் சா இராமாநுசம்

