Thursday, November 1, 2012

சீலம் ஆல்ல உன்செயலே – ஏன் செய்தாய் இப்படி வன்புயலே!?




நீலம் புயலும் வந்தாயே மக்கள்
   நிம்மதி இழக்கத் தந்தாயே!
காலன் வருவதாய் ஆயிற்றே-பெரும்
   காற்றொடு மழைவர போயிற்றே!
ஆலம் விழுதொடு ஆடியதே கடல்
   அலைகள் ஊருக்குள் ஓடியதே!
சீலம் ஆல்ல உன்செயலே ஏன்
    செய்தாய் இப்படி வன்புயலே!?


வாழைகள் முறிந்து வீழ்ந்தனவே உழவர்
    வயிரும் பற்றி எரிந்தனவே!
ஏழைகள் குடிசைகள் அழிந்தனவே-அவர்
     இருவிழி நீரைப்  பொழிந்தனவே!
பேழையுள் பாம்பென முடங்கினரே-ஏதும்
     பேசவும் வழியின்றி அடங்கினரே!
கோழைகள் அவராம் என்செய்வார்-உதவி
     கொடுத்தால் தானே! இனிஉய்வார்!


விளைந்த நெல்லும் மூழ்கியது நாற்றும்
    வேரெடு எங்கும் அழுகியது!
வளைந்த கதிர்நெல்  கொட்டியதாம்-இனி
    வாழ்வே உழவர்க்கு எட்டியதாம்!
தளர்ந்தவன் கைகள் மடங்கிவிடின்-உலகம்
    தாங்குமா பசிபிணி ஓங்கிவிடின்!
களைந்திட வேண்டும் அரசிதனை உடன்
    கடமையாய் எண்ணி அரசதனை!

                               புலவர் சா இராமாநுசம்
  

                                                                   

        

Wednesday, October 31, 2012

விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும் விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்



தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ 
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
         
                        புலவர் சா இராமாநுசம்

            கல்லூரியில்  படித்தபோது எழுதிய கவிதை!

Friday, October 26, 2012

ஊற்றாகிப் போயிற்றே ஊழல்தான் ஆயிற்றே காற்றாக எங்கெங்கும் காண்கிறதே




ஊற்றாகிப் போயிற்றே  ஊழல்தான் ஆயிற்றே
காற்றாக எங்கெங்கும் காண்கிறதே மாற்றாக
ஏதும் வழியின்றி ஏங்குகின்ற ஏழைக்கே
மோதும் துயர்தான் துணை

இன்னாரென் றில்லை! எவரென்றும் பேதமில்லை!
ஒன்னாராம்  என்பதில்லை! ஒன்றேதான் தன்னாலே
வாய்த்த வழியெல்லாம்  வாங்குவதே நோக்கமெனில்
காய்த்த மரத்திற்கே கல்லு

கணகிட்டே  காசுதனைக் கையூட்டாய்  கேட்டே
சுணக்கமின்றி செய்வதாக சொல்லி குணக்குன்றாய்
கூசாது வேடமிட்டே கூறுகின்றார் அந்தந்தோ
பாசாங்கே செய்வதவர் பண்பு

அஞ்சாமல் தேர்தலிலே அள்ளியள்ளி  செல்வத்தை
பஞ்சாக விட்டாரே பார்தோமே நெஞ்சார
எண்ணிப்பார்ப் பீரா எவர்மீதே தப்பென்றே
உண்ணினால் வந்திடுமே உண்மை

நோட்டுக்கே  வாக்குதனை நோகாமல் கொண்டவரும்
நாட்டுக்கே  வந்தாரே நாடாள !கேட்டுக்கே
ஏற்ற  வழிதன்னை ஏற்படுத்தித் தந்தோமே
மாற்றம் வருமா மதி

எந்தத் துறைதன்னில் இன்றில்லை ஊழலென்றே
வந்த நிலையுண்டா?வாய்ப்புண்டா! தந்தவரே
ஓங்கி ஒலிக்கின்றார் ஊழல் ஒழிகயெனும்
பாங்கேதான் இங்கே பகை



               புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 24, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!



எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!




ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

    திருமிகு இரஜினி பிராதாபும், வேறு சில உறவுகளும்
வெண்பா வேண்டுமென விரும்பி கேட்டதால் இன்று, இது
மீள் பதிவு. விரைவில் புதியன வரும்.
                                  புலவர சா இராமாநுசம்



Monday, October 22, 2012

இருப்பது எத்தனை நாளே! –அதனை இயம்பிட இயலா! வாளே




முகமது அறியா நிலையில் வாழ்த்து
    மொழிந்திட எனது வலையில்
அகமது கொண்டே வந்தார் என்
   அகமிக மகிழத் தந்தார்!
இகபர இன்பம் பெற்றே நாளும்
    இன்றுபோல் என்றும் உற்றே!
செகமதில் வாழ்க நன்றும் அவர்
    சிறப்புற்று வாழ்க! என்றும்

பிறந்தநாள் இருந்த சுற்றம் விட்டுப்
    பிரிந்திட என்னை! மற்றும்
மறந்திட இயலா உறவே நாளும்
    மறுமொழி வழியாய் வரவே
சிறந்தநல் வாழ்வே பெற்றேன் தூய
    செந்தமிழ்  தன்னைக் கற்றேன்!
திறந்தநல் மனமே  கொண்டேன் வந்த
     தீமைகள் ஓடக் கண்டேன்!

தென்னையாய் வாழ வேண்டும் வாழ்வே
     தெளிந்தநல் நீராய் யாண்டும்!
பொன்னெனப் போற்றப் பலரும் எழில்
     பொங்கிடப் பூத்த  மலரும்
கன்னலின்  சுவையே போன்றும் முக்
    கனிதரும் இனிமை யான்றும்
என்னையே மாற்றிக் கொள்வேன்! நான்
    என்றென்றும் நன்றி சொல்வேன்!

இருப்பது எத்தனை  நாளே! அதனை
    இயம்பிட இயலா! வாளே
அறுப்பது நமது உயிரே என
    ஐயனும்  மொழிந்த  உரையே!
பொறுப்பது கொண்டே எதிலும் சற்று
   புன்னகை பூக்க பதிலும்
வெறுப்பது இன்றி சொல்வீர்-செய்யும்
   வினையெலாம் நீரே வெல்வீர்!

                    புலவர் சா இராமாநுசம்
   


Thursday, October 18, 2012

இன்றென் பிறந்த நாளாம்! எண்பத்தி ஒன்றும் ஆக !




எண்பதும்  நிறைந்து  போக-வயது
   எண்பத்தி ஒன்றும் ஆக
நண்பரே! வாழ்த்தும் நன்றே நாளும்
  நலம்பெற சொல்வீர் இன்றே
உண்பதும் குறைத்துக் கொண்டேன் நல்
   உடல்நலம் பேணக் கண்டேன்
பண்புடைய உறவே பெற்றேன் வலை
   பதிவரால் உவகை உற்றேன்

உள்ளுவ உயர்வு என்றே முன்னோர்
   உரைத்திட்ட வழியில் சென்றே
கொள்ளுவ கொண்டேன்  வாழ ஐயா
   குறையின்றி மகிழ்வும் சூழ
எள்ளுவார் எள்ளும் போதும் நான்
    எண்ணிய தில்லை ஏதம்
வள்ளுவர் வழிதான் வாழ்வாம் அவ்
    வழிமாறின் வருதல் தாழ்வாம்

வரவுக்கும்  ஏற்ற செலவே என
    வாழ்ந்ததால் துன்பம் இலவே
உறவுக்கும் கைகொ டுப்பேன் என்
   உரிமைக்கும் குரல் கொடுப்பேன்
கரவுக்கும் இடமே இன்றி-நல்
    கடமையில் உள்ள மொன்றி
பொறுமைக்கும் இடமே தந்தேன் வீண்
   புகழெனில் ஒதுங்கி வந்தேன்

உற்றவள் துணையால் தானே வாழ்வில்
   உயர்வினை அடைந்தேன் நானே
பெற்றநல் பிள்ளைகள் பெண்கள் தினம்
    பேணிடும் என்னிரு  கண்கள்
கற்றவர் கடமை என்றே அவர்
   காத்திட நானும் இன்றே
நற்றமிழ் கவிதை தன்னை மேலும்
    நல்கிடச் செய்தார் என்னை

                     புலவர் சா இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...