Monday, August 4, 2014

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!



உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!

அப்பனே ஏழுமலை ஆண்டவ வணங்குகிறேன்!
தப்பென இதுவரை தவறியும்  செய்ததில்லை!
எப்பவும் என்னுடைய இதயத்தே வாழ்கின்ற
ஒப்பென ஒன்றில்லாய்! உன்னடி வணங்குகிறேன்!

தாங்கிட இயாலாத தளர்வெனக்கே வந்தாலும்
நீங்கிட வழிகாட்டும் நிமலனே வணங்குகிறேன்!
ஓங்கியே உலகளந்த உத்தம! உன்நாமம்
தாங்கியே திருவடி தலைவைத்தே வணங்குகிறேன்!

எண்ணிய எய்திட எனக்கருளும் செய்கின்ற
புண்ணிய பெருமாளே! போற்றியுனை வணங்குகிறேன்!
கண்ணிலே கருமணியாம் கண்ணனே காலமெலாம்
மண்ணிலே மறைந்தாலும் மறப்பேனா! வணங்குகிறேன்!

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!
என்னைக் காத்தருள்வாய் ஏழுமலைப் பெருமாளே!
பொன்னை வேண்டியல்ல! பொருளை வேண்டியல்ல
அன்னை அலர்மேலு அருள்வேண்டி வணங்குகிறேன்!

புலவர் சா இராமாநுசம்

Saturday, August 2, 2014

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்

ஒரு மகிழ்ச்சியான செய்தி!
நான் அடுத்த வாரம்(5-ஆம் தேதி) சீனாவில் , பெய்ஜிங் ,ஷங்காய், அடுத்து ஹாங்காங், மெக்காவ் போன்ற
இடங்களுக்குச் சுற்றுலா உங்கள் வாழ்த்தோடு செல்கிறேன்
என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்!

சுதந்திரத் திருநாளன்று அதிகாலை சென்னை வந்து விடுவேன்
அதன் பின்பே என் பதிவுகள் வழக்கம் போல் ,தொடரும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, August 1, 2014

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி, மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை



மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா
நீங்களுமா..! போவதென்ன!? வருதல் பழியே

அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஒயவில்லை –தினம்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை
எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ!
ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே
உழுவார்க்கு ஊக்கதெகை ! நெல்லுக்கே மறுப்பதா!- இந்த
உலகுக்கே அச்சாணி! அவன்கழுத்தை அறுப்பதா!
எழுவாரா ! தொழில்செய்ய! எண்ணுவாரா! மத்தியிலே -உடன்
ஏற்றிடுவீர் ! சிந்தித்து மாற்றமது புத்தியிலே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 30, 2014

பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும் பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!


ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை!
பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக!
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா நமது இந்தியா!

தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ !ஏற்றோம் பழியே!
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே!
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்!
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே!

ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
உலகமே உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே!
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்!
கூசாமல் எம்மவரைக் கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்!
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே!

கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க!
மண்ணோடு அவனாட்சி மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்!
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்!
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 24, 2014

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும் மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!



பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும்
பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை!
கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக்
கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை!

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும்
மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!
புலராத விடியல்போல் இருளே சூழும்-அந்த
புண்பட்ட இளங்குறுத்து எவ்வண் வாழும்!

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும்
காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
ஆமிதுவே! அறிவீரே! திருந்தப் பாரீர்-பெற்ற
அன்னையவள் பெண்தானே ! எண்ணிக் காரீர்!

செய்தித்தாள் செப்புவது நாளும் இதையே- என்ன
செய்வதெனத் தெரியாமல் திகைத்தல் விதியே!
உய்தித்தான் வந்திடுமா….? ஏங்கும் உள்ளம்- மனித
உருவத்தில் மிருகமா….? துயரே கொள்ளும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 22, 2014

பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று பாராள வந்தோரின் செயலும் ஒன்றே!



பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று
பாராள வந்தோரின் செயலும் ஒன்றே
பிழையை நீக்கி நன்மைதர முயலவில்லை-எதிர்த்து
பேசுதற்கும் நாதியுண்டா! அதுதான் தொல்லை

வாக்குறுதி தந்த தெல்லாம் வெற்றுச் சொல்லே-ஏழை
வாழ்வதற்கு யார்வரினும் வாழியே இல்லே
நாக்குறுதி இல்லாதார் நாடகம் தானே-இங்கே
நடக்கிறது நாள்தோறும் வருந்தல் வீணே

ஆளுக்கொரு கருத்தென்று அமைச்சர்  சொல்ல-மோடி
அரசாங்கக் கட்டுப்பாடும் தளரும் மெல்ல
நாளுக்கொரு விளக்கமதில் ! நன்மையல்ல ஐயா –சற்று
நாவடக்கம் வேண்டும்! ஆய்வீர்! மெய்யா

விலைவாசி குறைவதற்கு ஏற்றவழி காண்பீர் –நாட்டில்
வீணாகும் நதிநீரை தடுக்கவழி பூண்பீர்!
தலையாய திட்டங்களை முன்னெடுத்து வருவீர் –மொழித்
தகராறு தலைதூக்கா உறுதிமொழி தருவீர்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 17, 2014

ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
     தவறின் பஞ்சம் ஈண்டமே

                         புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...