Saturday, December 19, 2015

தூய்மை வருமே துணை!



அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 18, 2015

வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!



பதவி ஒன்றே குறிக்கோள் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு! இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல! அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது ! இதனைக் கண்டு வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 15, 2015

திருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்றும்!



நடந்தது நடந்தது போக- இனியே
நடப்பது நலமாய் ஆக
திடமொடு முடிவு எடுப்பீர் –மக்கள்
தேவையை அறிந்து நடப்பீர்
கடமையாய் எண்ணிச் செயல்பட – சகல
கட்சிகள் இணைந்து புறப்பட
உடமைகள் இழந்த மக்கள் –துயர
உள்ளத்தின் புண்ணை ஆற்றும்


ஒருவரை ஒருவர் சாடி –மேலும்
உரைப்பதால் தீமைக் கோடி
வருவதால் உண்டா பலனே –அதனால்
வாராது மக்கள் நலனே
பெறுவது ஏதும் இல்லை-நாளும்
பெற்றது தீராத் தொல்லை
திருவினை இழந்தோர் போற்ற –வழிகள்
தேடியே புண்ணை ஆற்றும்

புலவர் சா இராமாநுசம்

Monday, December 14, 2015

தாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் தடுத்திடு வாராமல் தொத்து நோயே

தாங்காது  தாங்காது  இயற்கைத்   தாயே –உடன்
      தடுத்திடு   வாராமல்   தொத்து  நோயே
தூங்காத  விழியிரண்டின்  துணையக்  கொண்டும் விரைந்து
       தொலையாத  இரவுயென  துயரம்   மண்டும்
நீங்காத  என்றேதான்  நாளும்  பொழுதும்-அந்தோ
       நிலையான  நிலையாலே நெஞ்சுள்  அழுதும்
தேங்காது  கண்ணீரும்  சிந்து  கின்றோம்  -இயற்கைத்
      தேவியேயுன் திருவடி  தொழுது  நின்றோம்!

புலவர்  சா  இராமாநுசம் 



Sunday, December 13, 2015

முகநூல் பதிவு!



நடுத்தர மக்களே! இனியாவது யோசிக்க வேண்டுகிறேன் இதுவரை இராமன் ஆண்டால் நமக்கென்ன , இராவணன் ஆண்டால் நமக்கென்ன என்று ஓட்டுப் போடுவது கூடவீண்வேலை என்று எண்ணியது போதும் உங்களைப் போன்றவர் ஒதிங்கிக் கொண்டதின் விளைவு இன்றைய நிலை வெளியே வாருங்கள்! வருவீர்களா????

புலவர்  சா  இராமாநுசம் 

Friday, December 11, 2015

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை



எங்கு காணிலும் குப்பையடா-நம்
எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை


பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை தீரும் வழிகாண்பீர்-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 10, 2015

கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே!


கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
இதயம் படைத்த பல்லோரே
கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
காகித பிளாஸ்டிக் குப்பைகளே!
விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
விரைவாய் முகத்தில் மோதிடுமே!
திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
தெருவில் போடவும் தடுப்பீரா!


வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
வீதியில் குப்பையைத் தேக்குவதும்!
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
கேட்பினும் , அவரைச் சாடுவதாம்!
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
நோய்கள் பிறக்கும் தாயன்றோ!
கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
தூக்கிக் கொண்டு போனாலும்!
எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
எறிந்து விட்டுச் செல்வாரே!
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
தவறே நாளும் செய்வாரே!
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
குறையின்றி வீதியில் சிதறிவிடும்!

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
சொல்லினும் கேளார் பலபேரே!
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
தனக்கென என்றும் போவரே!
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
முறையாய் அதிலே சிலவற்றை!
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
எழுதினேன் தருவீர் கருத்துரையே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...