Showing posts with label தனி ஈழம் குறிக்கோள் மாற்றம் ஏமாற்றம். Show all posts
Showing posts with label தனி ஈழம் குறிக்கோள் மாற்றம் ஏமாற்றம். Show all posts

Thursday, July 19, 2012

தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றே


தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்

     தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl

இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்

    இயம்பாதீர்! கலைந்தது வேடம் நன்றே


கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே-உரிய

    காரணம்தான் யாமறியோம் சொல்வீர் யாதே

பனிபட்டு பூக்கருகி உதிரல் போல-ஏனோ

    பதில்சொல்ல இயலாது விழித்தல் சால


உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்

    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!

வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக

     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!


வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்

    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!

நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்

     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!


அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை

    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!

கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்

    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!


உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்

   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!

திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி

    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!



ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்

    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்

கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு

    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!


எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த

    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!

புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது

    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!


                         புலவர் சா இராமாநுசம்









இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...