எங்கே போனாய் நிம்மதியே-உனை
எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நான்
அலைந்தும் மறைந்தாய் நீஓடி
உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-படும்
துயரம் நீக்கிட போனாயா
சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீ
மாற்றிட வாவது போனாயா
நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
புரளுவோன் வாழ்விலும் நீயில்லை
பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
அடைந்த உண்டா நிம்மதியே
பெற்றவர் மனதிலும் நீயில்லை-அவர்
பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வி
கல்லார் மனதிலும் நீயில்லை
எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீ
இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார் மனதிலும் இவ்வாறே-இன்றிப்
பறந்தால் வாழ்வது எவ்வாறே
ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர் வாழ்வொடு போனாயோ-பொருள்
மாறிட நிம்மதி ஆனாயோ
புலவர் சா இராமாநுசம்

