நியாயம் தானா அம்மாவே-இது
நியாயம் தானா அம்மாவே
ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
ஆணையில் நீக்கினீர் சும்மாவே
தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
ஆயன உடனே செய்வீரா-நீக்க
ஆணயை இரத்தும் செய்வீரா
நீதி கேட்டே அலைகின்றார்-தம்
நிலையை எண்ணிக் குலைகின்றார்
வீதியில் புரண்டே அழுகின்றார்-உமை
வேதனை நீக்கத் தொழுகின்றார்
நாதியில் அவர்கே எண்ணுங்கள்-உடன்
நலன்பெற வழியும் பண்ணுங்கள்
சாதியில் ஏழைகள் அனைவருமே-அவர்
சந்ததி வாழ்ந்து நலம்பெறுமே
தவறா செய்தார் அன்னவரே-வேலை
தந்தது ஆண்ட முன்னவரே
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
எதற்கு இந்த முன்கோபம்
சுவரா என்ன இடித்துவிட-ஒரு
சொல்லில் வாழ்வை முடித்துவிட
அவரால் வாழ இயலாதே-அவரை
அநாதை ஆக்க முயலாதீர்
இரண்டு முறையே பட்டார்கள்-பாபம்
இனியும் தலையில் குட்டாதீர்
திரண்டு உதிக்கும் கண்ணீரே-அவர்
தினமும் வடிக்க பண்ணீரே
மிரண்டு ஓடும் மாடக-உடல்
மேலும் வற்றி கூடாக
வரண்டு போகும் அவர்வாழ்வே-இனி
வாழ்வும் தாழ்வும் உம்கையில்
புலவர் சா இராமாநுசம்

