அந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர்
அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே
சிந்திட
துளிகளைச் சென்றீர் எங்கே -உடன்
செப்புவீர் நண்ப! செயலற்று இங்கே
வெந்திடப்
பலரும் வேதனைத் தீயில் -உமக்கு
விரைந்துமே திறந்ததேன் மரண வாயில்
தந்தனை
உயிரை தவித்திட உறவே -யாரும்
தாங்கிட இயலா உமது மறைவே!
பதிவர்
திருவிழா பாங்குற நடைபெற -அன்று
பார்த்தவர் அனைவரும் பாராட்டி விடைபெற
மதிய
உணவினை மாண்புற அளித்தீர் –வந்தவர்
மலர்முகம் கண்டே உள்ளம் களித்தீர்
நிதியதில்
உமதுப் பங்கும் உண்டே –
உம்
நிகரில்
உழைப்பே மறவாத் தொண்டே
விதியென
ஒன்றும் உண்டென அறிவேன் –அதன்
விளைவென உணர்ந்தா ? ஆறுதல் பெறுவேன்
வந்தவர்
எல்லாம் போவது உண்மை –இது
வாழ்வியல் ! உலகில் ! இயற்கைத் தன்மை
சிந்தனை
எனக்குத் தோன்றிய போதும் –நெஞ்சில்
செப்பிட இயலா துயரே மோதும்
உந்தனை
இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும்
உள்ளத்தில்
உமது நினைவே துஞ்சும்
வந்தனை
செய்வோம் வாழும் வரையில் –பதிவர்
வரலாற்றில்
சிறப்பிடம் பெற்றீர் வலையில்!
புலவர் சா இராமாநுசம்

