நிம்மதி
வலைதனில் போயிற்றே –சில
நிகழ்வால் இந்நிலை ஆயிற்றே !
நம்மதி
கொண்டு வொல்வோமா –இதில்
நமக்கென என்றே சொல்வோமா ?
ஒன்றுப்
பட்டும் செய்வோமா –நம்
உரிமையைக் காத்து உய்வோமா!
என்றும்
தானே தூண்டுகிறேன் –நல்
இளைஞர் தம்மை வேண்டுகிறேன்!
வெள்ளம்
வருமுன் அணைபோட –நான்
வேண்டும் என்றேன் எனைசாட
உள்ளம்
கொண்டார் சிலபேரே –ஆனால்
உணர்ந்தார் இன்று பலபேரே!
குற்றம்
யாரையும் சொல்லவில்லை –வரும்
கொடுமைக்கே வைப்போம் ஓரெல்லை!
கற்றவர்
நாமென காணட்டும் –அரசு
கருத்தினில் மாற்றம் பூணட்டும்!
ஆட்டைக்
கடித்த நிலையன்றே –இது
அடிமை யாக்கும் நிலையொன்றே!
கேட்டை
நீக்க சிந்திப்போம் –நாள்
குறித்து
பதிவரே சந்திப்போம்!
மூத்த
பதிவரே வாருங்கள் –உடன்
முறையாய் அழைப்பினைத் தாருங்கள்
காத்திட இதுதான் இன்றுவழி –எனில்
காண்போம் என்றும் தீராப்பழி!
புலவர் சா இராமாநுசம்

