அர்த்தநாரி ஆண்டவனே உடலைத் தந்தான் –எதற்கு????
ஆய்வதற்கா!?! அவதாரம் எடுத்து வந்தான்
சரிபாதி பெண்களென உணர்த்தத் தானே –இதனை
சரியாகப் புரிதலில்லா ஆண்கள் வீணே!
மறுபாதி பெண்களென உரிமைத் தருவீர்-வாழ்வில்
மட்டற்ற மகிழ்வினையே என்றும் பெறுவீர்
திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர்
தினமான இன்றிதனைப் போற்ற வேணும்
தோன்றியநாள் முதலாக அடிமை யாக்கி –வாழத்
துணையாக வந்தவளின் துயரைப் போக்கி
சான்றெனவே ஆண்மக்கள் விளங்க யாண்டும்- எதிலும்
சமபங்குப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்
ஊன்றுக்கோல் ஒருவர்க்கு ஒருவர் ஆமே –என்ற
உண்மைதனை இருவருமே உணர்ந்து தாமே
ஆன்றோரின் அறவழியே நடந்து வாழ்க!-மகளிர்
அனைவருக்கும் என்றென்றும் இன்பம் சூழ்க!
புலவர் சா இராமாநுசம்

